தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
‘அசுரன்’, 'பாவக்கதைகள்' (ஆந்தாலஜி) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.
லாக்கப் நாவலை விசாரணை எனும் திரைப்படமாகவும், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாகவும் இயக்கிய இவர், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து சூர்யா நடிப்பிலான வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார். முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் உருவாக்க முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதேபோல் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் உள்ளன.
தமிழ்நாடு
சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும்" என பேசினார்.
இச்சூழலில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆனது. இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன், "#தமிழ்நாடு வாழ்க #തമിഴ്നാട് വിജയിക്കട്ടെ #తమిళనాడు వర్ధిల్లాలి #ತಮಿಳುನಾಡಿಗೆ ಜಯವಾಗಲಿ #तमिलनाडु जयहो । Long live #TamilNadu Long live #India" என ட்வீட் செய்தார்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை ஒரு நிகழ்வில் சந்தித்த இயக்குனர் வெற்றிமாறனிடம் தமிழ்நாடா? தமிழகமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு உடனடியாக இயக்குனர் வெற்றிமாறன், "தமிழ்நாடு" ஒரே வார்த்தையில் என பதில் அளித்துள்ளார்.