தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன்.
இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் படங்கள் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுகிறது. காக்கா முட்டை, உதயம் NH4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஆவார். 5 முறை தேசியவிருதை பெற்றிருக்கிறார்.தற்போது இவர் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை மற்றும் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற International Film Festival of Kerala 2022ல் சினிமா பற்றிய கலந்துரையாடல் நடந்தது. இதில் மலையாள இயக்குனர்கள் லிஜோ ஜோசப் பெலிஸ்ஸரி, கமல், சிபி மலையில் ஆகியோருடன் வெற்றிமாறனும் கலந்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் திராவிட அரசியல்
இதில் வெற்றிமாறன் பேசியது, "தற்போது தமிழ் சினிமாவில் வரும் புதிய படங்கள் திராவிட அரசியலின் கொள்கைகளை முன்வைக்கிறது, மேலும் அந்த கொள்கைக்கு வலு சேர்க்கின்றன. சமூக யதார்த்தங்களும் அரசியல் சூழ்நிலைகளும் இத்தகைய திரைப்படங்களுக்கு கருப்பொருளை வழங்குகின்றன,” என்றார்.
மேலும் "வேறு எந்த ஊடகத்திலும் என்னை வெளிப்படுத்தும் அளவுக்கு நான் தயாராக இல்லை. அதனால், ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தேன். பின்னர், திரைப்படங்களை தயாரிப்பதில் எனது கிராப்டை முயற்சி செய்யலாம் என்று உணர்ந்தேன், ” என்றும், விசாரணை திரைப்படம் தனக்கு சினிமாவின் கிராப்ட் பற்றி நிறைய கற்றுக் கொடுத்தது என கூறினார். "விசாரணைக்குப் பிறகு, நான் என்னை மிகவும் நம்பிக்கையுடன் வெளிப்படுத்த முடியும்" என்று நம்பிக்கையாக அவர் கூறினார்.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூறுகையில், திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தைப் போலல்லாமல், OTT இயங்குதளங்கள் பார்வையாளர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய சுதந்திரம் அளிக்கின்றன என கூறினார். மேலும், "பெரிய திரை அல்லது சிறிய திரைப்படங்களை எங்கு பார்க்க வேண்டும் என்பதை பார்வையாளர்கள் தீர்மானிக்கும் வகையில் திரைப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.