கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” வெளியானது முதல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "#PS1 கவருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான தமிழ் வரலாற்றுத் திரைப்படம். மணிரத்னம் படம் உருவாக்கத்தில் தான் ஒரு அரசன் என்று மீண்டும் நிருபித்து விட்டார். ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் சித்திரமான சித்தரிப்பு. ரஹ்மானின் மியூசிக்-ரிவெட்டிங்! முழு 3 மணி நேரமும் தொடர்ச்சிக்கான சூழ்ச்சிகள். இந்த காவியத்தை உருவாக்கிய பரந்த இராணுவத்திற்கு (படக்குழு) வாழ்த்துக்கள்!" என ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.