கொரோனா வைரஸ் பாதுகாப்பாக மே 17 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்மர் ரிலீஸை ப்ளான் செய்திருந்த பல படங்கள், தியேட்டர்களின் மூடலால் தள்ளி போயிருக்கின்றன. சிறிய படங்களை ஆன்லைனில் வெளியிட்டாலும், மாஸ்டர், சூரரைப் போற்று, ஜகமே தந்திரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் தியேட்டரில் வெளியாவதுதான் சரி என்பதே பெரும்பான்மையினரின் கருத்து. இத்தகைய சூழ்நிலையில், தியேட்டர்கள் குறித்தும், அதன் நினைவுகள் குறித்தும் பிரபலங்கள் தங்களின் மறக்கமுடியாத அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும், Matinee Memories-ன், இந்த அத்தியாயத்தில் இயக்குநர் சீனு ராமசாமி, தனது ஸ்வீட் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
தமிழ் சினிமாவில் மிக தரமான ஃபீல் குட் திரைப்படங்களை, மண் மணம் மாறாமல், அதற்குரிய யதார்த்தத்துடன் தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் சீனு ராமசாமி, திரையரங்கம் பற்றி என்றதும் ஆர்வமாக பேச ஆரம்பித்தார். முதலில் தனது சிறுவயது அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தவர், ''நான் பிறந்தது கிராமமாக இருந்தாலும், மதுரையில் இருக்கும் என் தாத்தா வீட்டிற்கு கண்டிப்பாக வந்துவிடுவேன். அப்போது மதுரையில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. திரையரங்கங்கள் தான் அப்போது மக்களுக்கு லேன்ட்மார்க். தியேட்டரை சொல்லிதான், குறிப்பிட்ட இடத்துக்கே வர சொல்வார்கள். அப்படி மதுரையில் நான் பார்த்த படங்கள் ஏராளம். எனது பாட்டியுடன் சேர்ந்து கொண்டு, அங்கு பல திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். குறிப்பாக எம்.ஜி.ஆர் படங்கள் ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடி கொண்டிருக்கும். அப்படி திரைப்படங்களை மக்கள் கொண்டாடிய காலம் அது. ஒரே திரைப்படத்தை இரண்டு முறை எல்லாம் தியேட்டரில் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
அதே போல பதின்பருவத்தில் திருப்பரங்குன்றத்தில் எங்கள் வீட்டின் அருகில் இருந்த லக்ஷ்மி அக்கா, அவர் படத்துக்கு செல்லும் போது துணைக்கு என்று சொல்லி என்னையும் அழைத்து சென்றுவிடுவார். அவருடன் சேர்ந்து பல திரைப்படங்களை அங்கு கண்டிருக்கிறேன். அதிலும் ஒரு நீரோடையை தாண்டிதான் நாங்கள் தியேட்டருக்கு செல்ல வேண்டும். ஓடையில் தண்ணீர் இல்லாத பட்சத்தில், நடந்தே சென்றுவிடலாம். ஆனால் தண்ணீர் இருக்கும் பொழுது, அதற்குள் இறங்கி, கால்கள் மாட்டிக்கொள்ளாதவாறு ரொம்ப ஜாக்கிரதையாக நடந்து செல்வோம். கரைக்கு வந்த பின், கையில் எடுத்து வந்த மாற்றுத் துணியை போட்டுக்கொண்டு, தியேட்டருக்கு சென்றுவிடுவேன். அப்படி திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு படத்தையும் நான் ரசித்து ரசித்து பார்த்த சமயத்தில்தான், அங்கு முதல் ஏ.சி. தியேட்டர் வந்தது. முதல் முறையாக ஏ.சி தியேட்டர் என்ற போது எங்களுக்குள் பெரும் பரவசம் தொற்றிக்கொண்டது. வீட்டிலிருந்து ஏ.சி குளிருக்காக போர்வைகளை கூட எடுத்து கொண்டு படம் பார்க்க சென்றோம். அப்படியான நினைவுகளை கொடுத்த தியேட்டரில்தான், பாரதிராஜா சாரையும் ரேவதியையும் முதல் முறையாக பார்த்தேன். சுருட்டை முடியுடன் ரேவதியையை அழைத்து சென்ற பாரதிராஜாவின் அந்த காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது. குறிப்பாக அப்போது தியேட்டர்களுக்கேன தனியாக சில விஷயங்கள் இருந்தன. இன்டர்வலில் தட்டில் திண்படங்களை எடுத்து வந்து விற்பார்கள், பாத்ரூமில் கொட்டிக்கிடக்கும் ப்ளீச்சிங் பவுடர் வாசம். ப்ரொஜக்டர் வெளிச்சத்தில் உள்ளேயே ஆண்கள் அடிக்கும் பீடி, சிகரெட்களின் புகை என அப்போதைய தியேட்டர்களுக்கென தனி கலர் இருந்தது''. அப்படி கொண்டாட்டமாக பார்த்த திரையனுபவத்தின், மற்றொரு பரிமாணத்தை ரசித்த கதையையும் ரொம்பவே அழகாக பகிர்ந்து கொண்டார் இயக்குநர்.
சென்னை வந்த பிறகு தியேட்டர்கள் பற்றிய பார்வை மாறியது, திரைப்பட விழாக்களின் மூலமாகதான். அப்போது பாலு மகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, பல உலக சினிமாக்களை தேடி தேடி பார்க்க தொடங்கினேன். அப்படியான படங்களை சென்னை திரைப்பட விழாக்களில் போடுவார்கள். ஆனால், உள்ளே செல்ல குறிப்பிட்ட தொகை செலுத்தி உறுப்பினர் கார்டு வாங்க வேண்டும். இல்லையென்றால் உள்ளே விட மாட்டார்கள். எப்படியோ அரும்பாடுபட்டு, ஒரு வழியாக அந்த படங்களை பார்த்துவிடுவேன். அப்படி பார்த்த படங்கள் குறித்தும், அதன் இயக்குநர் குறித்தும் எழுதி வைத்து கொள்வேன். அப்படி எழுதி வைத்தது குறிப்பு ஒன்று, சமீபத்தில் கிடைத்த சம்பவமும் நடந்தது. அதன் மூலம் உதவி இயக்குநர்களுக்காக இருக்கும் வாட்சப் க்ரூப்பில், நான் நல்ல படங்களை பரிந்துரைத்து வருகிறேன் என ஃபிலிம் ஃபெஸ்டிவல் நினைவுகளை பகிர்ந்து கொண்டவர், தனது சினிமாவை தியேட்டரில் பார்த்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
எனது முதல் படமான கூடல்நகர் வந்த போது, அதன் தியேட்டர் மொமன்ட்ஸை என்னால் அனுபவிக்க முடியவில்லை. ஆனால் சுமார் இரண்டரை வருட போராட்டத்திற்கு பின்னர், தென்மேற்கு பருவக்காற்று ரிலீஸான போது, நானும் விஜய் சேதுபதியும் உதயம் தியேட்டருக்கு சென்றிருந்தோம். அப்போது இன்னொரு பெரிய ஹீரோவின் படம் ரிலீஸாகியிருந்தது. எல்லோருமே அந்த படத்துக்குதான் சென்றார்கள். ரொம்ப குறைவான கூட்டமே தென் மேற்கு பருவக்காற்று படத்திற்கு சென்றதை பார்த்தோம். ஆனால், அப்படி பார்த்த கொஞ்சம் பேரும், படம் முடித்து வரும் போது, கண்கள் கலங்கி ஒருவித ஃபீலோடுதான் வந்தார்கள். அதை பார்த்த போது நானும் சரி, விஜய் சேதுபதியும் சரி, மனதில் பெரும் நெகிழ்ச்சியை உணர்ந்தோம்'' என கூறியவர், ''சீக்கிரமே கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்து, ஆரோக்கியமான சினிமா வளர்வதற்கான விஷயங்கள் நடக்க வேண்டும்'' என தனது எதிர்ப்பார்ப்போடு முடித்து கொண்டார்.
தனது திரைப்படங்களை போலவே மண் மணம் மாறாது, தன் தியேட்டர் மெமரீஸ்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் சீனு ராமசாமியை போலவே, நாமும் நம் நினைவுகளில் மூழ்க்கி இருப்போம். அடுத்து இன்னுமொரு பிரபலத்தின் அழகான நினைவுகளோடு சந்திக்கலாம்..!