மாமனிதன் திரைப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
விஜய் சேதுபதி – சீனு ராமசாமி…
இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இந்த படம் பரவலாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இளையராஜா- யுவன் முதல் முறையாக…
மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணையும் முதல் படமாக மாமனிதன் அமைந்துள்ளது. இந்த கூட்டணிக்காக படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றன. இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளன. இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை ‘தர்மதுரை’ தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கைப்பற்றியுள்ளார். வரும் ஜூன் 23 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாக உள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி நேர்காணல்…
இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி இயக்குனர் சீனு ராமசாமி Behindwoods சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் பிரத்யேகமான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். படம் பற்றி பேசிய அவர் “இளையராஜா- யுவன் ஷங்கர் இணைந்து இசையமைக்கும் முதல் படத்தில் நான் இருக்க வேண்டும் என்று விஜய் சேதுபதிதான் என்னை இந்த படத்தில் கொண்டுவந்தார். படத்தின் அறிவிப்பு சம்மந்தமாக எங்களை சந்திக்க அழைத்த போது, விஜய் சேதுபதி ஷூட்டிங்கில் இருந்ததால் தாமதமானது. எங்களுக்கு இளையராஜா என்ற மாமனிதர் ஒன்றரை மணிநேரம் காத்திருந்தார். ஆனால் அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்தது. என் படத்தில் பாடல் எழுதி இருப்பதாக கவிஞர் கருணாகரன் என்னிடம் வந்து சொன்னபோது எந்த படம் என்று கேட்டேன். மாமனிதன் என்று சொன்னார். அப்படியா வாழ்த்துகள் என்று கூறினேன். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. இளையராஜாவின் அலைகள் ஓய்வதில்லை பாடலான ‘தரிசனம் கிடைக்காதா’ பாடலைதான் நான் இப்போது இசைஞானியைப் பார்த்து பாடுகிறேன்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.