தமிழ் திரையுலகில் கதைக்கும், கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து பிரபல இயக்குநர் பாராட்டியுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு ‘நீதானா அவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்த ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம், ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இயல்பான நடிகையாக இடம் பிடித்தார். இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமியின் பிறந்தநாள் கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்த்துக்களை ஏற்றதுடன் இயக்குநர் சீனு ராமசாமி அவரது நடிப்பு குறித்தும் பாராட்டியுள்ளார். இயக்குநர் சீனு ராமசாமியின் ட்வீட்டில், ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் கலைச்செல்வி, தர்மதுரை படத்தில் அன்புச்செல்வி. இந்திய சினிமாத்துறையின் இயல்பான நடிகை. எளிமை, அன்பான உள்ளம், இத்தனை ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கிறது. நன்றி மா” என வாழ்த்தியிருந்தார். இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தை சீனு ராமசாமி இயக்கி வருகிறார். அதேபோல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் மணிரத்னம் கதை எழுதி தயாரித்து வரும் படம் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதியுடன் ‘க/பெ ரணசிங்கம்’, கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.