கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, நம்மை துன்புறுத்தி வரும் நிலையில் மற்றொரு சோக செய்தி வெளியாகி நம்மை நிலைகுலையச் செய்துள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலை ஒன்றில் இருந்து விஷ வாயு வெளியாகி அப்பகுதி மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்த விஷவாயு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வீதியெங்கும் ஒவ்வொருவராக மயங்கி விழும் காட்சிகள் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதள பக்கம் வாயிலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, ''வைரஸிற்கு பிறகு தற்போது விஷ வாயு தாக்குதல், ஏலியன் அட்டாக் மட்டும் தான் இன்னும் நடக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த ஜான் மகேந்திரன் நாசா வெளியிட்ட வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில் திரைத்துறை செயல்படாமல் இருக்கும் நிலையில், கடவுள் நிஜ வாழ்க்கயில் திரில்லர் படம் எடுப்பதில் பிஸியாக இருக்கிறார். என்று பதிவு செய்துள்ளார்.