“என் குழந்தைக்கு உயிர் கொடுக்க வேண்டுகிறேன்” - மக்களிடம் பார்த்திபன் வேண்டுகோள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் நிறுவனம் சார்பில் பார்த்திபன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் ஒத்த செருப்பு.  இந்த படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். வேறு நடிகர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்கவல்லை. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் 'நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ஆகிய படங்கள் இந்தவாரம் ரிலீஸாகின்றன. எனவே ஒத்த செருப்பு படத்திற்கு தியேட்டர்கள் பறிபோகும் என்கிற நிலையில்  பார்த்திபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த நல்ல சினிமாவை நாலு பேர் பார்க்கிற படமாக மட்டுமில்லாமல், ஒரு மிகப்பெரிய கமர்ஷியல் படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் இருப்பதால் தான் 4-வது நாளைக் கூட அழகாகக் கடந்துள்ளது. முதல் நாள் 10-15 பேர் தான் திரையரங்குகளில் இருந்தார்கள். 2-வது நாள் படம் நல்ல பிக்-அப்பாகி விட்டது.நேற்று (செப்டம்பர் 23) திங்கட்கிழமை வேலைநாளில் கூட 12 பேர் பார்த்த திரையரங்குகளில் எல்லாம் 60 பேர் வந்துள்ளனர். ஒரு படம் பிக்-அப் ஆவதற்கு அந்தக் காலத்திலிருந்தே கொஞ்சம் நேரம் தேவை. இந்தப் படம் இப்போது தான் பிக்-அப்பாகியுள்ளது.

திங்கள், செவ்வாய், புதன் என அப்படியே ஏறும். வெள்ளிக்கிழமை வேறு படங்கள் வருகின்றன. ஆகையால் இந்தப் படத்தை உங்கள் குழந்தையாக எடுத்துக் கொண்டு, நண்பருடைய படம், உங்களுடைய படமாக நினைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரியான கனவுப் படம் எப்போதாவது தான் வரும்.இம்மாதிரியான படங்களுக்கு முதல் வாரம் பெரிதாக இருக்காது. அடுத்ததாக 3 படங்கள் வரும் போது, திரையரங்கு உரிமையாளர்களின் சூழல் தெரியும். ஆகையால், இந்தப் படத்துக்குக் கொஞ்சம் காட்சிகள் கொடுத்து, இன்னும் ஒரு வாரத்துக்குத் திரையிடுங்கள். இப்போது இருக்கும் திரையரங்குகளை அப்படியே கொடுத்துவிட்டீர்கள் என்றால், அதில் ஒவ்வொரு காட்சியை வேண்டுமானால் கட் பண்ணிக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வகையில் 2-ம் வாரமும் இந்தப் படமும் தாக்குப்பிடிக்க வேண்டும்

நான் யாருக்குமே எதிரியல்ல. இந்தப் படத்தில் மூன்றாம் நபரின் பணமே கிடையாது. பணம் வந்தாலும் எனக்குத் தான், போனாலும் எனக்குத் தான். படத்தைப் பாருங்கள், அப்போது தான் இந்த மாதிரியான படமெல்லாம் 2-ம் வாரம் தான் பிக்-அப்பாகும் எனத் தெரியும். அது 'அன்னக்கிளி' ஆகவே இருந்தாலும் சரி தான்.உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். படத்தில் விஷயமுள்ளது என்பது மக்களுக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது. இப்போது தான் வர ஆரம்பித்துள்ளனர். ஆகையால், அதற்காகக் கொஞ்சம் திரையரங்குகள் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த வாரமும் கூட்டம் குறைவாக இருந்தது என்றால், அப்புறமாக நீங்கள் படத்தை எடுத்துவிடலாம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கூட்டம் நன்றாகவுள்ளது. மீதமுள்ள திரையரங்குகளில் சுமாராகவுள்ளது

கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் ஒருவனை அடித்து வீழ்த்தாமல், அவனுக்கான வாய்ப்பைக் கொஞ்சம் கொடுக்குமாறு ரொம்ப அன்போடு, தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் என் இருப்பை இங்கு பதிவு செய்ய முடியும். மக்களிடம் ஒரு நல்ல படத்தைப் பார்க்க வைக்கப் போராடி வருகிறேன். திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் நாம் படம் பார்க்கவில்லை என்றால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியும்.ஆகையால், என்னோட அன்பான அறிவான திறமையான மக்கள் விரும்பக் கூடிய குழந்தையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். தயவுசெய்து அதற்கு இன்னும் உயிர் கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்'' என்று மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பார்த்திபன்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Radhakrishnan Parthiban Oththa Seruppu Size 7

People looking for online information on Oththa Seruppu Size 7, R.Parthiban will find this news story useful.