சிவகார்த்திகேயனின் எஸ்கே 16 படம் குறித்த தகவலை இயக்குநர் பாண்டிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர். முதல் படமான பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்று தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த குடும்பச்சித்திரமான கடைக்குட்டி சிங்கம் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 'கடைக்குட்டி சிங்கம்' படம் வெளிவந்து ஒரு வருடம் நிறைவுற்றுள்ளது. இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் கார்த்தி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்த பாண்டிராஜ், சிவகார்த்திகேயனின் 16வது படமும் குடும்பக் கதைதான் என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த நண்பர்களுக்காக இரவு, பகலாக இன்னொரு பக்கா பேமிலி மாஸ் என்டர்டெயினர்-காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.