''இந்த தோல்வியை ஒப்புக்கொண்டு...'' - இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பா.ரஞ்சித் தனது படங்கள் மூலமாக சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து தனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அவரது படங்கள் தொடர்ந்து சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்துவது வழக்கம்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்திடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த கொரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம்  டி. கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.அம்சவள்ளியை சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தை காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது  எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் ஒரு சிறந்த முற்போக்கு மாநிலம் என்று நாம் என்னதான் பெருமையாக பேசிக்கொண்டாலும், சாதிக்கெதிரான மனநிலையை கட்டியெழுப்புவதில் நாம் இன்னும் தேக்க நிலையிலேதான் இருக்கிறோம். கொரோனா நோய்தொற்று எப்படி நம் முன் தீர்மானங்களை நொறுக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம்மிடையே இருக்கும் இசங்களும், கொள்கைகளும், சாதிவெறியின் போக்கை எந்த விதத்திலும் மடைமாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது .

இந்த தோல்வியை எல்லோரும் ஒப்புக்கொண்டு இந்த மனித சமூகத்தின் மிக இன்றியமையாத மனிதத் தன்மையை, மனித மாண்பை மீட்க நம்மை நாமே  பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மை கண்களை திறந்து இந்த கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது? தலித் வெறுப்பை எப்படி அழித்தொழிப்பது? என்ற முன்னெடுப்பை நாம் செய்தே ஆகவேண்டும். இதனை இப்போது நாம் செய்யத் தவறினால் இந்த நூற்றாண்டின் கொடுந்துயருக்கு  நாம் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.

உலகமே துவண்டு கிடக்கக் கூடிய இப்படியான நெருக்கடி காலத்திலும் கூட, அன்றாடம் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிற ஒவ்வொரு தலித்துக்கும் பின்னால் இருக்கிற வலியையும், வேதனையையும் இப்போதாவது நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Director Pa. Ranjith's Latest statement about Coronavirus issue in Tamilnadu | தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சி

People looking for online information on Coronavirus, Dalit, Pa Ranjith will find this news story useful.