இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கியவர் ரவிக்குமார். இதேபோல் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கியவர் ராம்குமார்.
தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகி வருகிறது. ராம்குமார் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை அடுத்து இயக்கிய திரைப்படம் ராட்சசன். விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ராட்சசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இவர்களின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஏ.ஆர்.கே சரவணன். சரவணன் தம்முடைய முதல் திரைப்படமாக ஆதி, ராமதாஸ் என்னும் முனீஸ்காந்த், நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடிப்பில் மரகதநாணயம் திரைப்படத்தை இயக்கி இருந்தார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில்உருவான இந்த திரைப்படம் பெருமளவில் ஹிட் அடித்தது.
இந்த திரைப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் மற்றும் அட்வெஞ்ச்சர் த்ரில்லர் வகையிலான கதைக்கரு என அனைத்துமே ஒரு முழுமையான காமெடி குடும்ப திரைப்படத்துக்கான ஜனரஞ்சகமான படமாக உருவாகி வந்திருந்தது.
இந்த நிலையில் மரகத நாணயம் படத்தின் 2வது பார்ட் உருவாவது பற்றிய தமது சமூக வலைப்பக்கத்தில் மரகத நாணயம் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், “#MaragathaNanayam2 கதைக்கருவை தயாரிப்பாளர் AxessFilm டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன்.. அதற்கு முன்பு.. சத்யஜோதி நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவங்க உள்ளேன்..இவற்றையெல்லாம் விட.. கொரோனாவிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் பிராத்தனைகள் ” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.