விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
விக்ரம் ரிலீஸ்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
ரிலீஸூக்குப் பின்…
வெளியானது முதல் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது விக்ரம். குறிப்பாக நடிகர்கள் கமல், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதுபோலவே அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலைவிடவும் அதிகம் என சொல்லப்படுகிறது.
திரையுலகினரைக் கவர்ந்த விக்ரம்…
ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரையும் விக்ரம் திரைப்படம் கவர்ந்துள்ளது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் ஏற்கனவே விக்ரம் திரைப்படம் பற்றி டிவீட் செய்தது இணையத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து தற்போது மூடர்கூடம் மற்றும் அக்னி சிறகுகள் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் நவீன் விக்ரம் திரைப்படம் பற்றி பதிவு செய்துள்ள டிவீட் கவனம் பெற்றுள்ளது . அதில் “ விக்ரம் திரைப்படம் மாஸ் & க்ளாஸ். சூப்பர். என்னைப்போன்ற கமல் ரசிகர்களுக்கு அன்லிமிடெட் அசைவ விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ். அனிருத் பின்னணி இசை தரம். ரோலக்ஸாக சூர்யாவின் அறிமுகம் சிறப்பு” எனக் கூறியுள்ளார். இயக்குனர் நவீனின் இந்த டிவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.