புகழ்ப்பெற்ற எழுத்தாளரின் மறைவுக்கு, இயக்குநர் மிஷ்கின் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழில் எழுத்தாளராகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் அறியப்படுபவர் சச்சி என்கிற கி.ஆ.சச்சிதாநந்தன். பலகாலம் நாடோடியைப் போல ஊர் சுற்றித் திரிந்தவர். நோபல் பரிசுபெற்ற `சாமுவேல் பெக்கட்'டின் `கோடோவிற்காக காத்திருத்தல்' (நாடகம்), தாகூரின் சித்ரா (நாடகம்), ரோசா லக்சம்பெர்கின் சிறைக்கடிதங்கள், பனிமலைப் பிரதேசத்துக் கதைகள், கல்மாளிகை (மராட்டி நாடகம்) போன்றவற்றை தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர் இவர்.
இந்நிலையில் தற்போது எழுத்தாளர் சச்சி இயற்கை எய்தியிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இயக்குநர் மிஷ்கின் அவருக்கு உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆசான், தத்துவ ஆசிரியர், அறிஞர்,எழுத்தாளர், நாடோடி,கதை சொல்லி, இயற்கை காதலன் சச்சி இன்று அவர் உடலை விட்டுப் பிரிந்து இயற்கையோடு கலந்தார். சச்சி, இந்த பூமியில் நடப்பதை நிறுத்தி, இன்று முதல் பால்வெளிகளுக்குப் பறந்து செல்லுங்கள். உங்களின் ஓய்வற்ற கால்களை நன்றியுடன் முத்தமிடுகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.