இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
மாமனிதன்
இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இந்த படம் பரவலாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் கூட்டணியில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கடுத்து அவர்கள் கூட்டணியில் உருவான தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ரிலீஸ்…
மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரும் இணையும் முதல் படமாக மாமனிதன் அமைந்துள்ளது. படத்தின் தமிழக மற்றும் கேரள விநியோக உரிமையைப் பெற்ற RK சுரேஷ், ஜூன் 24 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்தார். வெளியானது முதல் ரசிகர்கள் மத்தில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது மாமனிதன் திரைப்படம்.
மிஷ்கின் பாராட்டு
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் படம் பார்த்து பாராட்டி தன்னுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் “எல்லா சாமான்யர்களின் வாழ்விலும் விதி எனும் சூறாவளி அவ்வபோது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு மாமனிதனாக்குகின்றன. அவன் “மாமனிதன்” ஆகின்றான்.
மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்த படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது. மசாலா படங்களுக்கும் பம்மாத்து படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தைத் தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்.” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். முன்னதாக இயக்குனர் ஷங்கரும் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி ட்வீட் செய்திருந்தது கவனம் ஈர்த்தது.