தமிழக ஜல்லிக்கட்டுவில் தன் காளையுடன் மீண்டும் மீண்டும் வருடாவருடம் வந்து விடாமுயற்சியுடன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பெண்ணுக்கு இயக்குநர் சசிகுமார் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு
தமிழ் நிலத்தின் வீர விளையாட்டுகளுள் ஒன்று ஜல்லிக்கட்டு. வருடா வருடம் ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தில் பொங்கல் பண்டிகைகளின்போது நடப்பது வழக்கமான ஒன்று. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், வாடிவாசல் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு அவற்றுள் புகழ்பெற்றதாய் விளங்குகிறது.
திரைத்துறையில் ஜல்லிக்கட்டு
திரை மற்றும் எழுத்து துறையில் ஜல்லிக்கட்டுவின் பிரதிபலிப்பு இருந்துவருவதை காண முடிகிறது. பல வருடங்களுக்கு முன்பு நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஆல்பம் பாடல் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் புகழை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் அண்மையில் வெளியான அன்பறிவு திரைப்படத்தின் பட போஸ்டரும் ஜல்லிக்கட்டுவினை நினைவூட்டுவதாய் அமைந்தது. இதேபோல், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படமும் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு குறித்து உருவாகி வருகிறது. இந்த கதை பல வருடம் முன்பு சி.சு.செல்லப்பா எழுதிய நாவலின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகுமார் வாழ்த்து..
இந்நிலையில், இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் கோவை ஜல்லிக்கட்டுவில் வெற்றி அடைந்த பெண் குறித்த பதிவினை பகிர்ந்து, தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த அந்த பதிவில், கோவை ஜல்லிக்கட்டுவில், முத்துக்காளை என்கிற காளையை ஒவ்வொரு வருடம் அழைத்து வந்துள்ளார் யோகதர்ஷினி என்கிற பெண்.
அவருடைய காளைக்கு கடந்த வருடம் ஆறுதல் பரிசும் கொடுக்கப்பட்டபோதும் அவர் மறுத்ததாகவும் தற்போது இவ்வருடம் வென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய கொம்பு வெச்ச சிங்கம்டா திரைப்படம் அண்மையில் பொங்கல் சூழலில் வெளியானது. இதனைத் தொடர்ந்து Common Man உள்ளிட்ட திரைப்படங்களில் இயக்குநர் சசிகுமார் நடித்து வருகிறார்.