மலையாள ஹீரோவான டோவினோ தாமஸ் தொடர்ந்து தனது வித்தியாசமான வேடங்கள் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார். மேலும் தனுஷ் ஹீரோவாக நடித்த 'மாரி 2' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் தமிழ் ரசிகர்களுக்கும் அவர் பரிட்சையமாகியுள்ளார்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்தியா முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாத நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது. நடிகர் டோவினா தாமஸ் நடித்து வரும் படமான 'மின்னல் முரளி' படம் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்காக கேரளா மாநிலம் காலடி என்ற ஊரில் கிட்டத்தட்ட ரூ.80 லட்சம் மதிக்கத்தக்க செட் ஒன்று வடிமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.
இந்த செட்டை திடீரென ஒரு கும்பல் புகுந்து, அந்த செட்டை அடித்து துவம்சம் செய்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். மேலும் நடிகர் டோவினோ தாமஸ் உருக்கமான அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் ஜான் மகேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், ''80 லட்சம் மதிக்கத்தக்க திரைப்பட செட் அழிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த அமைப்பு ஒன்று காலடி மகாதேவா கோவிலுக்கு எதிரில் சர்ச் தோற்றத்தில் இருக்கும் இந்த செட்டை அழித்துள்ளனர்'' என்று கடுமையாக சாடியுள்ளார்.