கொரோனா பிரச்னை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியை அதிகரித்துக் கொண்டிருக்க, அது முற்றிலும் ஒழிந்து உலகம் எப்போது நார்மலாகும் என்று அனைவரும் காத்துக் கிடக்கின்றனர்.
கொரோனா தொற்றுப் பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையான லாக்டவுன் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. திரைத்துறையும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் (டெக்னீஷியன்கள்) தங்களுடைய சம்பளத்தை குறித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை குறைக்க முன்வந்துள்ளனர்.
இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து எடுக்கவிருக்கும் தனது அடுத்த படமான அருவா பற்றிய தகவல்களை சமீபத்தில் வெளியிட்டார். அருவாவின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்தில் நடைபெறாததால், லாக்டவுன் முடிந்தபின் தகுந்த நேரத்தில் தொடங்கப்பட உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அருவா படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹரி. அதில் அவர் கூறியுள்ளது, ‘வணக்கம்.. இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் ’’தொழில்’’ மறுபடியும் நல்ல நிலைக்குத் திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப் போகும் ‘அருவா’ திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் இருபத்தி ஐந்து சதவிகிதம் (25%) குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
இயக்குனர் ஹரியின் இந்த முடிவினை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டி வரும் நிலையில், இயக்குனரும் நடிகருமான மனோபாலா தன்னுடைய டிவிட்டரில் ஹரியின் அறிக்கையை வெளியிட்டு அவரை வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.