கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக, தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் வெளியிட்டார்.
இதனையடுத்து கௌதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'குயின்' என்ற வெப் சீரிஸை இயக்கி வருகிறார். மேலும், 'கிடாரி' பட இயக்குநர் பிரசாத் முருகேசனும் கௌதம் மேனனுடன் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.
இந்த வெப் சீரிஸில், ரம்யா கிருஷ்ணன், அனிகா, சோனியா அகர்வால், இந்திரஜித் , விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியாகி 'குயின்' மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இயக்குநர் கௌதம் மேனன், ''ஒரு திரைப்படத்துக்கு எப்படி வேலை பார்ப்போமோ அப்படித்தான் இந்த வெப் சீரிஸிற்கும் வேலை செய்திருக்கிறோம். இதில் மிகவும் ரசித்து வேலை செய்தேன்.
நிறைய இயக்குநர்கள் இது போன்ற வெப் தொடர்களை இயக்க முன் வரவேண்டும். என்கிட்ட ஒருத்தர் மிகவும் வருத்தப்பட்டு கேட்டாங்க, படங்கள் இல்லாததுனால் வெப் சீரிஸ் பண்ண போய்ட்டீங்களானு கேட்டாங்க. நான் ஆச்சரியமா பார்த்தேன். உலகத்துல பெரிய பெரிய டைரக்டர்ஸ் எல்லாம் இந்த ஃபார்மெட்ல வொர்க் பன்றாங்க. கதைகளை சொல்வதற்கு சிறந்த வழியாக வெப் சீரிஸ் இருக்கும் என தோன்றியது'' என்றார்.