இயக்குநர் பாரதிராஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்க்கு அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு, அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் நமக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர், நண்பர்கள் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே பாரதிராஜா சார்பில் வெளியிடபட்ட அறிக்கையில், ' “என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை காரணமாக நான் நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் வந்து காணவர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும், நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, விரைவில் சந்திப்போம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான், இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “நுரையீரல் தொற்று காரணமாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது. மேலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. சிறப்பு மருத்துவக் குழுவானது உரிய பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புடன் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளித்து வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.