நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான மீரா மிதுன் சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தகாத வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியிருந்தார். இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''இதோ,நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்..
கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்? செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை, அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !!
அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன். சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி... எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.
தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது? யாரோ ஒருவனின் அவமானம்தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்... அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா??
மேலும் ஊடகங்கள் மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை ... எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே.. இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டிய வார்த்தைகளை மற்றும் நறுக்க வேண்டியவர்களை... தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்'' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.