இயக்குனர் அனுராக் காஷ்யப் தமிழகத்துக்கு வந்துள்ள நிலையில் அவர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ரைட்டர் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்.
கவனம் ஈர்த்த ரைட்டர்…
அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவான திரைப்படம் ’ரைட்டர்’. இந்த படத்தினை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்தது. இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். . இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி வசூல் ரீதியாக்வும் விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.
இந்த படத்தில் காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக சமுத்திரக்கனி நடித்திருந்தார். காவல்துறையிள்ள கீழ்நிலை பணியாளர் ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் படமாக ரைட்டர் அமைந்திருந்தது. படத்தின் ரிலீஸூக்குப் பிறகு படக்குழுவினர் அனைவரும் பாராட்டுகளைப் பெற்று வந்தனர்.
ரைட்டர் படத்தைப் பார்த்த அனுராக் காஷ்யப்
இந்நிலையில் தற்போது தமிழகத்துக்கு வந்துள்ள பாலிவுட் இயக்குனரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தியாவின் முகமாக அறியப்படுபவருமான அனுராக் காஷ்யப் ‘ரைட்டர்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். இந்த ஏற்பாட்டை இயக்குனர் வெற்றிமாறன் ஒருங்கிணைத்ததாக தெரிகிறது. படம் பார்த்த அனுராக் காஷ்யப் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியவர்களோடு படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இயக்குனரின் நெகிழ்ச்சி ட்வீட்….
இது சம்மந்தமாக ரைட்டர் பட இயக்குனர் பிராங்ளின் ஜேக்கப் பகிர்ந்துள்ள ட்வீட்டில் ”மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். என் படத்தை இயக்குனர் அனுராக் காஷ்யப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. இதை சாத்தியமாக்கிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி. இது மாதிரியான வாய்ப்பை அளித்த இயக்குனர் பா ரஞ்சித்துக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.