மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கவிருப்பதாக வெளியான தகவலை இயக்குநர் மறுத்துள்ளார்.
‘இருமுகன்’, ‘நோட்டா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அடுத்தப்படம் குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை. ஆனால் இந்த காம்போ எனக்கு பிடித்திருக்கிறது. தற்போது நல்ல கதைகளில் மட்டுமே பணியாற்றி வருகிறேன். எதிலும் ஒப்பந்தமாகவில்லை. இப்போது கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘சிந்துபாத்’, ‘சங்கத்தமிழன்’, ‘மாமனிதன்’ ஆகிய திரைப்படங்களும், புதிதாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ திரைப்படமும் விஜய் சேதுபதி கைவசம் உள்ளன.