இயக்குநர் அமீர் மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் அமீர். இவர் இயக்கிய மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் இவர் நடிகராகவும் வடச்சென்னை படத்தில் அசத்தினார். தற்போது அமீர் ஆர்யாவை வைத்து சந்தனத்தேவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். இவர் அமீர் இயக்கிய ஆதி பகவன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதனிடையே மறைந்த ஜெ.அன்பழகன் குறித்த நினைவுகளை இயக்குநர் அமீர் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, ''எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், பாண்டி பஜாரில் தமிழ் ஈழ விடுதலை போராட்ட தலைவர் பிரபாகரன் இருக்கும் போது, ஒரு துப்பாக்கி சூடு நடந்தது. அப்போது அவர் கைது செய்யப்படும் போது, அவர்தான் பிரபாகரன் என காவல்துறையினருக்கு தெரியாது. அந்த நேரத்தில் திநகர் மாவட்ட செயலாளரான ஜெ.அன்பழகன் தான் கலைஞர் கருணாநிதி சொல்லி, பிரபாகரனை ஜாமினில் எடுக்கிறார். இப்போது இருக்கும் அவரது திநகர் அலுவலகத்தில், 21 நாட்கள் பிரபாகரன் தங்க வைக்கப்பட்டிருந்தார். 21 நாட்களும் அவருக்கு உதவியாக இருந்த அந்த நிகழ்வை பற்றியும், பிரபாகரன் குறித்தும் அவர் பல நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக'' அமீர் தெரிவித்தார்.