இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், அஜித் நடிப்பில், உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அஜித் (Ajith Kumar) நடிப்பில் வலிமை படத்தின் படப்பிடிப்பு (01.09.2021) அன்று நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யா சென்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து அஜித் பங்குபெறும் அதிரடி பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டதை அடுத்தும் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பேற்றது. இதனைத் தொடர்ந்து கடைசியாக வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிளான அம்மா பாடல் வெளியாகி 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில், 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், முக்கிய முதன்மை பெண் கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். கதிர் இப்படத்துக்கு கலை இயக்குனராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயனும் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் வலிமை படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ இன்று மாலை 5:30 மணிக்கு சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவில், பைக்கில் ரைடு வரும் அஜித் தம்முடைய அதீத உழைப்பை கொடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது.. மொத்த படக்குழுவினரும் சிரத்தையுடன் தங்களுடைய பங்களிப்பை கொடுத்து உருவாகி இருக்கும் வலிமை திரைப்படத்தின் இந்த மேக்கிங் வீடியோ பலரிடம் புல்லரிப்பு ஏற்படுத்தி இருப்பதில் சந்தேகம் இல்லை.
இந்த வீடியோவில் 02:17 என்கிற நிமிடத்தில் வரும் குறிப்பிட்ட காட்சி கவனிக்கப்பட வேண்டிய ஒரு மெசேஜை நம்மிடையே கடத்துகிறது என்று சொல்லலாம். அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார் நிஜவாழ்கையில் ஒரு பைக் ரைடராகவும் பைக் பிரியரகவும் இருக்கிறார். அத்துடன் இதில் மிகவும் பயிற்சி எடுத்த ஒருவராகவும் திகழ்கிறார்.
எனவே அவர் தம்முடைய அசாத்திய திறமையினால், வலிமை திரைப்படத்தில் வரக்கூடிய பைக் ஓட்டும் சாகச காட்சிகளில் ஈடுபட முடிகிறது. பயிற்சி இல்லாதவர்கள் இதை செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் வலிமை பட காட்சிக்காக, சாலையில் பைக் வீலிங் செய்யும் பொழுது அஜித் குமார் ஸ்கிட் ஆகி, முதுகுப்புறமாக கீழே விழுவதை காணமுடிகிறது. முறையான கவச உடைகளும், ஹெல்மெட் உள்ளிட்டவற்றையும் அஜித் அணிந்திருந்தார். இருப்பினும் கீழே விழுந்த பின்பு அஜித் எழுந்து நடக்கிறார்.
இந்த இடத்தில் வாழ்க்கைக்கு தேவையான காந்தியின் தத்துவம், இந்த மேக்கிங் வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
we may stumble and fall
But Shall rise again;
It should be enough if
We did not run away from the battle
- Mahatma Gandhi
நாம் தடுமாறி விழலாம்
ஆனால் மீண்டும் எழலாம்;
நாம் களத்தில் இருந்து வெளியேறாமல்
இருந்தால் போதுமானது!
- மகாத்மா காந்தி
என்கிற அர்த்தம் தரும் இந்த வரிகள், பலருக்கும் உத்வேகம் தரக்கூடிய இந்த வரிகள் பெரும் தன்னம்பிக்கை வரிகளாக அமைந்திருக்கின்றன.
இந்த வரிகளுக்கான காட்சிகளும் இந்த மேக்கிங் வீடியோவின் இறுதியில் இடம்பெற்றிருப்பது என்பது இந்த கோவிட் சூழ்நிலையில் மனரீதியாக தொய்வடைந்த பலருக்கும் உற்சாகத்தை கொடுக்கலாம். வலிமை திரைப்படம் பொங்கலை நோக்கி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.