விஜய் டிவி சேனல் மூலம் பிரபலமான பலரும் நல்ல முன்னேற்றங்களை கண்டு அடுத்தடுத்த வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி மூலம் நடிகர் சந்தானம், மா.கா.பா, விஜய் டிவி டிடி, கவின் மற்றும் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த புகழ், அஸ்வின், சிவாங்கி, சரத், முகின் ராவ், லாஸ்லியா என பலரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறியப்பட்ட விஜே ரக்ஷன் அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான, ‘கலக்கப்போவது யாரு’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடித்து வந்தார். தொகுப்பாளராக மட்டுமல்லாமல் கலகலப்பாக ஒரு நிகழ்ச்சியை வழி நடத்துவது என ஜாலியாக தன் பயணத்தைத் தொடர்ந்த விஜே ரக்ஷனுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம்.
துல்கர் சல்மான் மற்றும் ரீது வர்மா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜே ரக்ஷன் நிரஞ்சனியுடன் இணைந்து நடித்திருப்பார். தேசிங் பெரியசாமி இயக்கிய இந்த திரைப்படம் ரக்ஷனுக்கு மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் ரக்ஷன் இன்னும் பல பரிமாணங்களில் மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரக்ஷனின் பங்களிப்பு முக்கியமானது. இதனிடையே Behindwoodsக்கு விஜே ரக்ஷன் அளித்த பேட்டி ஒன்றில், “நான் செய்யும் பணிகள் எல்லாவற்றையும் விரும்பி, பிடித்து பண்ண வேண்டும் என்று நினைப்பேன். அப்படி நான் எல்லா வகையான வேலைகளையும் செய்து பார்த்துவிட்டேன். எல்லா தொழில்களையும் கிட்டத்தட்ட செய்துவிட்டேன் . நான் இன்னும் செய்யாத ஒன்றே ஒன்று காபி ஷாப்பில் வேலை பார்க்காதது தான். மற்றபடி நான் ஆசைப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து பார்த்துவிட்டேன்” என்று கலகலப்பாக கூறியிருக்கிறார். ரக்ஷன் தம் வாழ்வில் பல போராட்டங்களையும் தடைகளையும் கடந்து வந்து ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுவதுடன் அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.