ஷ்யாம் சிங்க ராய் படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் 'ஷ்யாம் சிங்க ராய்' என்னும் திரைப்படம், கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.
இரட்டை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த நானியின் நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
சிறப்பான கதை
இந்த படத்தில் நானியுடன், சாய் பல்லவி, கிரீத்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தினை ராகுல் சங்கரித்யன் என்பவர் இயக்கியிருந்தார். நிகழ்கால கதை ஒன்றை பிற்காலத்தின் கதையுடன் மறுபிறவி மூலம் இணைத்துள்ள இயக்குனர், இரண்டு வேறுபட்ட நானியைக் கொண்டு, மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார்.
ரசிகர்கள் வரவேற்பு
இதில், புரட்சிகர எழுத்தாளராக ஷ்யாம் சிங்க ராய் கதாபாத்திரத்தில் வரும் நானி, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும், சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் பெண்ணிய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில், கைத்தட்டல்களை அள்ளியது.
மிகப்பெரிய வெற்றி
திரையரங்கில் வெளியாகி, படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், சமீபத்தில் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி, மக்கள் மத்தியில் இன்னும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. இக்காலத்து சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை, அனைத்து தரப்பிலான மக்களிடையே கொண்டு சென்ற 'ஷ்யாம் சிங்க ராய்' திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.
ஹிட் வசனம்
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. 'தண்ணி கீழ தான் இருக்கு. தரையும் கீழ தான் இருக்கு. எந்த நீர்த்துளி மேல எந்த சாதின்னு எழுதி இருக்கு?. அவனும் இதே ஊருல தான் பொறந்தான். இதே ஊருல தான் வளர்ந்தான். இதே ஊருல தான் மண் ஆவான். அந்த மண்ணுல விளைஞ்சதை தான் உன் புள்ளைங்களும் தின்னுவாங்க' என்ற வசனம் தான் அது.
சாதி வேறுபாடுகளை ஒழித்து, நாம் அனைவரும் ஒன்று தான் என்பதை குறிக்கும் வகையில், புரட்சிகரமாக நானி பேசும் இந்த வசனம், தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.