இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்கும் "துருவ நட்சத்திரம்" படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இந்த படம் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தாமரை எழுதிய 'ஒரு மனம்' என்ற சிங்கிள் பாடலை கார்த்திக் மற்றும் ஷாஷா இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன் நடிகர் விக்ரம் & இயக்குனர் கௌதம் மேனன் சந்தித்து படத்தின் அடுத்த கட்ட வேலைகள் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசித்தனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்த துருவ நட்சத்திரம் படம், வரும் மே மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. துருவ நட்சத்திரம் முதல் பாகம் - யுத்த காண்டம் என போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
ஏப்ரல் 28 ஆம் தேதி, விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.