திக்கற்ற பார்வதி க்ளாசிக் படம் வெளியாகி 46 ஆண்டு சாதனை! பல 'முதன் முதல்களுடன்’ உருவான கதை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ். 1972-ம் ஆண்டு முதல் இயக்குனராகி கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.

சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் 1974-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி திக்கற்ற பார்வதி படம் வெளியானது. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுக்கும் முதன் முதலாக என்ற வார்த்தைக்கும் அவ்வளவு தொடர்பு உண்டு. காரணம் திக்கற்ற பார்வதியில் தொடங்கிய அந்த ‘இந்திய சினிமாவில் முதல் முறையாக’ என்ற வார்த்தை அவர் திரைப்பயணம் முழுவதும் தொடர்ந்து வந்தது. திரைமேதையான அவரின் ஆரம்ப காலத்திலேயே திக்கற்ற பார்வதி படம் அதற்கு வித்திட்டது.

திக்கற்ற பார்வதிதான் தமிழில்  சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய முதல் படம்.   ராஜாஜியின் பிரபல நாவலான "திக்கற்ற பார்வதி'' கதையை படமாக்கம் செய்ய விரும்பினார். அந்தப் படம் கலாபூர்வமாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் மக்களை சென்று அடையும்விதமாக கமர்ஷியல் விஷயங்களுடன் கூடிய கருத்தாக்கமும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரின் விருப்பம் அப்படியே நிறைவேறியது. திக்கற்ற பார்வதி படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டர். இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமி, பூர்ணம் விஸ்வநாதன், ஒய்.ஜி.மகேந்திரன், டைப்பிஸ்ட் கோபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் நியோ நாயர் படம்

சினிமாவில் ஆர்ட் சினிமா, கமர்ஷியல் சினிமா, பேரலல் சினிமா, நியோ நாயர் சினிமா என பல வகைமைகள் உண்டு. திக்கற்ற பார்வதி படம்தான் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையிலேயே முதல் நியோ நாயர் வகைத் திரைப்படம் ஆகும்.

மூதறிஞர் ராஜாஜி

1943-ம் ஆண்டு வெளியான ‘மது விலக்கு(கள்) ஒழிக’ என்ற தலைப்பில் ராஜாஜி ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டார். பின்பு இன்றளவும் மக்களை சிந்திக்க வைக்கும், குடியின் தீமைகளை தெள்ளந்தெளிவாக விளக்கி, நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் ராஜாஜி எழுதிய திக்கற்ற பார்வதி என்ற கதைதான், பின்னாளில் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவினால் திரையாக்கம் பெற்றது. இந்த அபூர்வ நிகழ்வு நடந்து இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் தீர்க்கதரிசியான ராஜாஜி அன்று சொன்ன ஆழமான கருத்துக்கள் இன்றளவும் ஏற்புடையதாக இருப்பது கண்கூடு.

திரைக்கதை, வசனம்

ராஜாஜியின் புகழ்பெற்ற கதையான "திக்கற்ற பார்வதி" என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு காரைக்குடி நாராயணன் என்ற இளம் எழுத்தாளரை அறிமுகப்படுத்தினார் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்.  20 வயதே நிரம்பிய காரைக்குடி நாராயணன் முதன்முறையாக இந்தப் படத்துக்குத்தான்  திரைக்கதை, வசனம் எழுதினார். அவர் "அச்சாணி'' நாடகத்தை பார்த்தார். அதன் கதை அமைப்பும், வசனமும் அவருக்குப் பிடித்திருந்தன. எனவே, "திக்கற்ற பார்வதி''க்கு திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பை காரைக்குடி நாராயணனிடம் ஒப்படைத்தார். அப்போது நாராயணனுக்கு வயது 20.

காரைக்குடி நாராயணனை சந்திக்க வேண்டும் என்று ராஜாஜி கூற நாராயணன் அவரை போய் பார்த்தார். அப்போது ராஜாஜி  `இந்த இளைஞன் திரைக்கதை - வசனத்தை ஒழுங்காக எழுதுவாரா என்று மனதுக்குள் நினைத்து அதை வெளிப்படையாகவும் கேட்டுவிட்டார். ‘இந்தப் படம் குடியினார் ஏற்படும் சீரழிவுகளை கூறுவது, ஒரு குடும்பம் எபப்டி அழிந்து போகிறது என்பதை விளக்கத்தான் இந்தக் கதையை எழுதினேன், குடிப்பதால் சில நன்மைகள் கூட் இருக்கின்றது என்று மாற்றி எழுதிவிட மாட்டீர்கள் அல்லவா? என்று விளையாட்டாக கேட்டுள்ளார் மூதறிஞர் ராஜாஜி.

அதற்கு நாராயணன் பணிவுடன், ‘நீங்கள் எழுதியுள்ள கதையில் வலியுறுத்தப்பட்ட கருத்தை எள்ளளவும் மாற்ற மாட்டேன், அதற்கேற்றபடியே வசனத்தை எழுதுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

படத்தில் லட்சுமி பிரமாதமாக நடித்தார்.  பார்வதி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். காரைக்குடி நாராயணன் எழுதிய வசனங்கள் தியேட்டரில் அமோக வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகும் முன், ராஜாஜி காலமாகிவிட்டார். படத்தை பார்க்க ராஜாஜி உயிருடன் இல்லாதது அனைவருக்கும் பெரும் குறை.

"திக்கற்ற பார்வதி''யில் பட வெற்றிக்குப் பிறகு அதில் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்ட அனைவரும் புகழ் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படப்பிடிப்பு சாதனை

இப்படத்தை தயாரித்தவர்கள் என். லக்ஸ்மிகாந்தா ரெட்டி, நவதராங் எச். வி. சஞ்சீவ ரெட்டி மற்றும் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் ஆகியோர். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ராஜாஜியின் சொந்த ஊரான ஓசூரில் நடந்தது.  வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும்  ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி மற்றும் ஒசூரைச் சுற்றியுள்ள இடங்களிலுமே நடந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற கோர்ட் சீன்கள் உண்மையில் அவ்வூரிலுள்ள நீதிமன்றத்தில் நடந்தது. அங்குள்ள வக்கீல்களே அக்கதாபாத்திரமாகவும்,  ஊர் மக்களே துணை நடிகர்களாகவும் நடித்தனர். இந்திய சினிமாவில் இப்படி நடந்தது இதுவே முதல்முறையாகும். இது யதார்த்தமாக படத்தை காண்பித்ததுடன், கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி சிறப்பான காட்சியமைப்பு செய்த இயக்குனருக்குப் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.

ஓசூரிலேயே தொடர்ந்து 18 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்தார் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ். படம் மிகச் சிறப்பாக அமைந்தது. இபப்டத்தை ஜெமினி நிறுவனம் ரிலீஸ் செய்தது.

இசையமைப்பாளர்

பிரபல வீணை வித்துவான் சிட்டிப்பாபு முதன்முறையாக சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுடன் இந்தப் படத்தில்  இசையமைப்பாளராக இணைந்தார்.  வாணி ஜெயராமின் குரலில் ஆகாயம் மழை பொழிஞ்சா என்ற பாடல் பரவலான கவனத்தைப் பெற்றது.

இவ்வகையில் பல மைல்கல்களை திக்கற்ற பார்வதி படம் அந்நாட்களில் பெற்றது. ஜனரஞ்சகமான படம் என்று ஒரு புறம் மக்கள் பாராட்டிக் குவிக்க, கலை ரசனையுடன் உருவாக்கப்பட்டது என்று திரை ஆர்வலர்களும் விமர்சகர்களும் இன்றளவும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விருதுகள்

  • 1975- ம் ஆண்டின் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
  • சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது - 1975-ம் ஆண்டு நடிகை லட்சுமி பெற்றார்
  • சிறந்த படத்திற்கான ஃபிலிம்பேர் விருது - 1975-ம் ஆண்டு கிடைத்தது

சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் என்ற மகா கலைஞன்

இந்தப் படத்தின் வெற்றிதான் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவின் கலைப்பயணத்தின் அழகான தொடக்கமாக அமைந்தது. அதன் பிறகு அவர் பல தெலுங்கு, கன்னடம், தமிழ் படத்தை இயக்கிய பிறகு, 1988-ம் ஆண்டு டாக்கீஸ் என்றழைக்கப்பட்ட பேசும் படம் வந்துவிட்ட பல அண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மௌனப் படத்தை இயக்கினார். 

புஷ்பக் என்ற பெயரில் கன்னடத்திலும், பேசும்படம் என்ற டைட்டிலுடன் தமிழிலும் வெளியானது அந்தப் படம். கமல்ஹாசன் நடித்த பேசும்படத்தை தயாரித்து இயக்கினார் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ். இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சிறந்த தேசிய பொழுதுபோக்கு படம் என்ற விருது பெற்றது. சிறந்த திரைப்பட இயக்குநர் என்ற விருதை இந்தப் படத்துக்காக சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுக்கு அளித்து கெளரவித்தது கர்நாடக அரசு.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கியும், தயாரித்தும், திரைக்கதை எழுதியும் தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக்கினார் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்.  தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து, அவர் இயக்கிய ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம், மும்பை எக்ஸ்ப்ரஸ், மகளிர் மட்டும், காதலா காதலா உள்ளிட்ட அவர் இயக்கிய எல்லா படங்களும் வசூல்ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சகரீதியாகவும் பாராட்டுக்களை அள்ளிக் குவித்தவை.

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் 2008-ல் 'கடோத்கஜ்" என்ற படத்தை இயக்கினார். இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் அவர் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் அவரது முந்தைய எல்லா சாதனைகளையும் முறியடித்து. முதன்முறையாக கமலை குள்ளனாக நடிக்க வைத்தார். டெக்னிகல் விஷயங்கள் அவ்வளவாக இல்லாத 1989 ஆண்டிலேயே அந்தப் படம் பல புதிய சாதனைகள் படைத்தது. 1990-ம் ஆண்டு வெளியான நகைச்சுவைப் படமான மைக்கேல் மதன காமராஜன் இன்றளவும் அனைவராலும் விரும்பிப் பார்க்கக் கூடிய படமாகும். மகளிர் மட்டும் மற்றும் காதலா காதலா ஆகிய படங்கள் பெரிய வசூலில் சாதனை செய்தது. 2005-ம், ஆண்டில் மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரு அதி நவீன படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் இயக்கினார் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhikkattra parvathy released 1946 june 14 completes 46 years

People looking for online information on Dhikkattra Parvathi, Singeetam Srinivasa Rao will find this news story useful.