மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரனும், மூத்த மகன் அழகிரியின் மகனுமானவர் தான் தயாநிதி அழகிரி.
இயக்குநர் சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவான தமிழ்ப்படத்தின் மூலம் இளம் தயாரிப்பாளராக சினிமாவுக்குள் அறிமுகமான தயாநிதி அழகிரி, பின்னர் மதுரையை கதைக்களமாக கொண்ட தூங்காநகரம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
பின்னர் தல அஜித்தின் மெகா ஹிட் படமான மங்காத்தா உள்பட பல தமிழ் படங்களை தயாரித்துள்ளார். திரைத்துறை மட்டுமா என்றால்? தீவிர கிரிக்கெட் ரசிகரான தயாநிதி அழகிரி டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் ஈடுபாடு உடையவர். குறிப்பாக மதுரை ‘சூப்பர் ஜெய்ன்ட்’ அணியின் உரிமையாளராகவும் இருந்தார்.
அப்போது கிராமப்புறத்தில் இருந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்புகளையும் கொடுத்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்ததன் மூலம் புகழ்பெற்றார். தற்போது அண்மையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் கூட, அந்த விழாவில், தயாநிதி அழகிரி, அவரது சகோதரி கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரியைக் கட்டித்தழுவி வரவேற்ற தருணம் புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா தயாநிதி. இவர்களுக்கு ஏற்கனவே ருத்ர தேவ் என்கிற மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையாக அண்மையில் மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மே 28-ஆம் தேதி பெயர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி, குழந்தையின் பெயர் வேதாந்த் ஏ தயாநிதி என்றும் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படம் தொடர்பாக வெளியான அடுத்த மாஸ் அப்டேட்!