வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'அசுரன்'. வெற்றிமாறன் இயக்கிய இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், டிஜே, கென், பசுபதி, அம்மு அபிராமி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் தயாரிப்பாளர் தாணு Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவரிடம் 'துப்பாக்கி', 'தெறி' படங்களை விட 'அசுரன்' லாபம் என தெரிவித்தது குறித்து தொகுப்பாளர் அக்னி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ''துப்பாக்கி' First Copy அடிப்படையில் தயாரித்தேன். அந்த படம் லாபமாக இருந்தாலும், லாபம் பகிரப்பட்டது. தெறி படத்தில் செங்கல்பட்டு ஏரியாக்களில் சிக்கல் இருந்தது. அதனால் அந்த படத்தின் லாபமும் முழுதுவமாக கிடைக்கவில்லை.
ஆனால் 'அசுரன்' படத்தை தமிழ்நாடு முழுவதும் நானே ரிலீஸ் செய்தேன். அதனால் அந்த படத்தின் லாபம் முழுவதும் எனக்கு கிடைத்தது. அதனால் அப்படி சொன்னேன் என்றார். மேலும் தளபதி விஜய்யின் 'சச்சின்' படம் குறித்து கேட்ட போது, அந்த படம் சந்திரமுகியுடன் வெளியானது. சந்திரமுகி எனும் காட்டாற்று வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கையில், சச்சின் தென்றல் போல தவழ்ந்து வந்தது.
அந்த படம் திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. எனக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அந்த படத்தை வாங்கிய அத்தனை பேருக்கும் லாபத்தை கொடுத்தது. சந்திரமுகி வெற்றி படம் தான்'' என்றார்.