சென்னை: புதுப்பேட்டை படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
செல்வராகவன் எழுதி இயக்கிய 2006 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியாகி தமிழ் சினிமாவில் கல்ட் அந்தஸ்தை பெற்ற அரசியல் கேங்ஸ்டர் திரைப்படம் புதுப்பேட்டை. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவனின் தம்பி தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க, சினேகா, சோனியா அகர்வால், பாலாசிங், அழகம் பெருமாள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி சில காட்சிகளில் அடியாளாக இந்த படத்தில் தோன்றி இருப்பார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இப்படம் 26 மே 2006 அன்று வெளியிடப்பட்டது.
சினிமாஸ்கோப் வடிவத்துக்குப் பதிலாக சூப்பர் 35 மிமீயில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம், டிஜிட்டல் வடிவில் வெளியான முதல் படமும் புதுப்பேட்டை தான். வெளியாகும் போது கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் சில வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவின் கல்ட் அந்தஸ்தை பெற்றது. தமிழ் சினிமா கேங்க்ஸ்டர் படங்களில் தவிர்க்க முடியாத படமாக திகழ்கிறது. அதிகப்படியான வன்முறை காட்சிகள் குடும்ப பார்வையாளர்களை படத்திற்கு வர விடாமல் செய்துவிட்டதாக பிற்பாடு செல்வராகவன் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் புதுப்பேட்டை படம் மீண்டும் திரையரங்கில் ரிலீசாக உள்ளது. சென்னை குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் மீண்டும் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. அதன்படி ஜனவரி 29 மற்றும் ஜனவரி 30 அன்று திரையிடப்படுகிறது. சனிக்கிழமை இரவு 10 மணிக்கும், ஞாயிற்று கிழமை மாலை 3 மணிக்கும் திரையிடப்படுகிறது. இதனை வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.இதற்கான டிக்கெட் முன் பதிவு துவங்கியுள்ளது.
ஏற்கனவே செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.