நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இருந்தது. மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், தனுஷுடன் நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்தடுத்து பல திரைப்படங்களிலும் நடிகர் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வரிசையில், அடுத்ததாக நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில், நானே வருவேன் திரைப்படத்தை தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளனர். இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த படத்தில் தனுசுடன் நடிகை இந்துஜா நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நானே வருவேன் படத்தின் போஸ்டர்கள் சிலவற்றை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில், "விரைவில் திரை அரங்குகளில்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைபற்றியுள்ளது தொடர்பாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, நானே வருவேன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தினை மிக பெரிய தொகைக்கு பிரபல சேனலான சன் டிவி வாங்கி உள்ளதாக தெரிவிக்கின்றது.
அதே போல, நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றது. இதன் காரணமாக, அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.