அண்மையில் அசுரன் படத்தில் சிறந்த நடிகருக்காக தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், அடுத்து வெளிவரவுள்ள “மாறன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தங்கள் தயாரிப்பில் உருவாகும் “மாறன்” பட டைட்டில் லுக்கை வெளியிட்டனர்.
இயக்குநர் கார்த்திக் நரேன், கதை களத்திலும், வித்தியாசாமான கதை சொல்லலிலும், ஸ்டைலீஷான மேக்கிங்கிலும் ரசிகர்களை அசத்தக்கூடியவர். அவர் படங்களுக்கு மட்டுமல்லாது அவர் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த முறை தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷூடன் அவர் கூட்டணி சேர்ந்திருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கும் இந்த படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் TG தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன், G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்துக்கு GV பிரகாஷ்குமார் இசையமைக்க, விவேகானந்தம் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா GK படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார். விக்கி மற்றும் ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகளை அமைக்கின்றனர்.
அத்துடன் இந்த படத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி65 படமான பீஸ்ட் படத்தில் நடன பணிகளை மேற்கொள்ளும் ஜானி மாஸ்டர், இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் #RC15 படத்தில் நடன பணிகளை மேற்கொள்வதற்காக இணைந்தார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தில் ஜானி மாஸ்டர் இணைந்திருப்பது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ஜானி மாஸ்டர் ரசிகர்களிடம் பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
தவிர, மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள நவரசா படத்தில் வரும் ‘ஆச்சர்யம்’ எனும் உணர்வுக்கான ‘புராஜக்ட் அக்னி’ என்கிற பகுதியை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். அரவிந்த் சுவாமி மற்றும் பிரசன்னா இந்த பகுதியில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.