தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. 1997 காலக்கட்டத்தில் நடக்கும் இந்த கதைக்களத்தை கண்முன்னே கொண்டுவந்து அசத்தி இருக்கிறார் கலை இயக்குநர் ராமலிங்கம். அவர் Behindwoodsக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
அதில், வாள் பற்றி பேசும்போது, “படம் முழுக்க பயணிக்கும் மீன், பாம்பு மாதிரி வாள் வரைஞ்சு காமிச்சேன். இப்போது இருக்கும் வாள் மாதிரி ஒரு வாளை டிசைன் பண்ணினோம். ஆனால் அதில் சில கட்டுப்பாடுகள் இருக்கு. பின்னர் கடைகளில் தேடி ஒரு வாளை வாங்கினோம். பின்னர் அதுபோன்ற ஒரு டம்மி வாளை தயார் செய்து பல காட்சிகளில் டம்மிகளை தான் பயன்படுத்தினோம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து காட்டுப்பேச்சியின் மாஸ்க் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார். குறிப்பாக கண்டாவரச்சொல்லுங்க பாடல் பற்றி சொல்லும்போது, “ஹீரோவை ரிவீல் பண்ணும்போது ஒரு கவன ஈர்ப்பை உருவாக்குவதற்காக யோசிக்கும்போது தீப்பந்தத்தில் தனுஷ் சாரை வரையலாம் என மாரி செல்வராஜ் சொன்னார். இதற்காக விறகு கட்டைகளை கொளுத்தி, கரிக்கட்டைகளை தயார் செய்தோம். வேலம்மாள் ஸ்கூல் சுவரில் வரையப்பட்ட அந்த ஓவியத்திற்கான பைலட் ஓவியத்தை முதலில் வரைந்தேன்.
பின்னர் யார் அந்த ஓவியத்தை வரைவது என்கிற டிஸ்கஷன் நடந்தது. ஆனால் என் உதவியாளர்கள், நண்பர்கள் யாருக்கும் ஒரு ஊர்க்காரர் போன்ற முகத்தன்மை இல்லை. பின்னர் முதலில் நான் வரைந்தேன். இப்போது ஷூட்டில் வரைவதை என் உதவியாளர் வரைய சொல்லிவிட்டேன். ஆனால் இயக்குநர் அழைத்து என்னை வரைய சொன்னார். சரி அது நன்றாக வரவேண்டும் என நானே ஓவியத்தின் சின்ன சின்ன விஷயங்களை வரையத் தொடங்கிவிட்டு, ஓவியத்தை முடிக்கும்போது, படப்பதிவு செய்யும்போது வரைந்து முடித்தேன். அந்த காட்சியில் நான் வந்ததும் நான் வரைந்ததும் சந்தோஷத்தை அளித்தது.” என்று குறிப்பிட்டார்.