மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் கர்ணன்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது.
இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது. பரியேறும் பெருமாள் படத்தினைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் இரண்டாவது திரைப்படமான கர்ணன் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானதுமே தனுஷ் ரசிகர்களும் குஷியாகிவிட்டார்.
இந்தநிலையில் படம் வெளியான பிறகு தனுஷின் 19 வருட திரைப்பயணத்தில் அதிரடி திருப்பமாக முதல் நாளிலேயே பதினோரு கோடி ரூபாய்க்கு பாக்ஸ் ஆபிஸில் கலெக்சன் ஆனது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த திரைப்படம் தனுஷுக்கு ஒரு ஹிட் திரைப்படமாக அமைந்தது. இப்படம் பற்றி கருத்து கூறிய விவேக், ‘எப்பவாச்சும் ஹிட் கொடுத்தா பரவால்ல.. எப்பவுமே ஹிட் கொடுத்தா எப்படி?’ என பாராட்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் அடுத்த திரைப்படத்தில் மீண்டும் இணைவதாகவும் பேசப்பட்டது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் தனுஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்வீட்டில், “கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.