கொரோனாவால் இந்தியா முழுவதும் மக்கள் தவித்து வருகின்றன. மக்கள் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிக்காக தினமும் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். இதனிடையே அரசும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவது உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதனிடையே கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் திரை துறை பிரபலங்கள் பலரும் மரணமடைந்து வரும் சோக சம்பவம் தினமும் நடந்து வருகிறது.
அந்த வகையில் தமிழ் திரைத்துறையில் பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள், சின்னத்திரை கலைஞர்கள் என பலரும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக பாடகர்கள் எஸ்.பி.பி, கோமகன், டி.கே.எஸ் நடராஜன்; நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ‘கில்லி’ மாறன்; சின்னத்திரை நடிகர்கள் சித்ரா, வடிவேல் பாலாஜி, குட்டி ரமேஷ், வெங்கட்; தயாரிப்பாளர்கள் கஜினி படத்தை தயாரித்த சேலம் சந்திரசேகர், தாதா87 படத்தை தயாரித்த கலைச்செல்வன் உள்ளிட்ட பலரும் மரணம் அடைந்திருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் வெண்ணிலா கபடி குழு, புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் நிதீஷ் வீரா மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் நிதிஷ் வீராவின் மறைவு குறித்துப் பேசியிருக்கிறார். அசுரன் திரைப் படத்தில் தனுஷின் நண்பராக வந்து இறுதியில் துரோகியாக மாறும் கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து இருப்பார் நிதீஷ் வீரா. அத்துடன் தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை படத்திலும் நடித்திருப்பார் நிதீஷ். அந்த பட சமயத்தில்தான் வெற்றிமாறனுடன் நிதீஷ் வீராவுக்கு அறிமுகம் ஏற்பட்டது.
இந்நிலையில் நிதீஷ் வீராவின் மறைவு குறித்து தனுஷ் தமது ட்விட்டர் பக்கத்தில், “மனம் குலையச் செய்கிறது. ஆத்ம அமைதி பெறுவாய் என் சகோதரா!” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: "புதுப்பேட்டை Time-ல நிதீஷ் அறிமுகம்.. இளைஞர்கள் பொறுப்பா இருக்கணும்!" - வெற்றிமாறன்!