சென்னை: நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது லைகா நிறுவனத்துக்காக புதிய படத்தை இயக்க உள்ளார். அதே போல் தனுஷ் நடிப்பில் பிப்ரவரியில் மாறன் படமும், அடுத்தாக திருச்சிற்றம்பலம் படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன, நானே வருவேன் படம் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உருவாகி வருகின்றது. சமீபத்தில் தமிழ் - தெலுங்கு படமான வாத்தியில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இருவரும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதில், 18 வருடங்கள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்பிகளாக ஒருவரையொருவர் இணைந்து, வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு, எனப் பயணம் செய்தோம்... இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... ஐஸ்வர்யாவும் நானும் முடிவு செய்துள்ளோம். ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக இன்னும் எங்களை புரிந்துகொள்வதற்கு இது சரியான நேரம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும். ஓம் நமசிவாய! என தனுஷ் கூறியுள்ளார்.
மேலும், ஐஸ்வர்யா இது பற்றி அறிக்கையில், 18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... தனுஷ் மற்றும் நான் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும். உங்கள் அனைவருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்" என ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் மூத்த மகள் சௌந்தர்யாவும் அஸ்வின் என்பவரை முதல் திருமணம் செய்து விவாகரத்து செய்த பின் விசாகன் என்பவரை மறுமணம் முடித்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சமந்தா - நாக சைதன்யா தம்பதியினர் விவாகரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.