இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் இன்று (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.
நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. இந்நிலையில் இரண்டு முறை தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன் டிவிட்டரில் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், "சிறந்த பைக் துரத்தல் காட்சிகளுடன் வலிமை படம் சிறந்த அதிரடி பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாகும். இயக்குனர் எச்.வினோத்தின் ஆக்ஷன் வகைமையில் சிறந்த படம். அஜித் குமார் சார் இந்த ஆக்ஷன்-எமோஷன் பேக் ரோலில் சூப்பர் ஆக நடித்துள்ளார். ரசிகர்களை ஈர்க்கும் தீவிரமான படம் வலிமை. தியேட்டர்களில் அனைவரும் பாருங்கள்" என டிவீட் செய்துள்ளார்.