ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிவி டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக அணியை உருவாக்கிக் கொண்டிருந்தார் மைனா. இதில் ஆயிஷாவிடம் என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனலட்சுமியிடம் கதிரவன் கேட்க அப்போது தனலட்சுமி, “எல்லாருக்கும் பிடித்தது போல் நடந்து கொள்ள வேண்டும் என்கிற சிந்தனையை ஆயிஷா மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை நாம் முன்வைக்கலாம்” என்று கூறினார்.
இதற்கு மைனாவிடம் நேரடியாக அசீம் பதிலளித்தார். அதன்படி, “நான் நான்கு வருடமாக ஆயிஷாவை பார்க்கிறேன், அவர் அப்போது இருந்தது போல் தான் இப்போதும் இருக்கிறார்” என்று கூறிக் கொண்டிருக்க பாதியில் எழுந்த தனலட்சுமி அசீம் சொல்வதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூற, இதற்கு அசீமோ, “இப்படிப் பேசும்போது பாதியில் எழுந்து சென்றால் என்ன அர்த்தம்? இது எல்லாருக்கும் போக தெரியும்.. நானும் போவேன்” என்கிறார்.
அதற்கு பதிலுக்கு தனலட்சுமியும், “போங்க எழுந்து போங்க” என்று கூறுகிறார். இப்படி இருவருக்கும் வாக்குவாதம் தொடங்கியது. இதில் அசீம், “தனலட்சுமி எல்லாரிடமும் எடுத்தெறிந்து பேசுற.. இப்படி எங்களுக்கும் பேச தெரியும் .. நீ சொன்னால் எல்லாரும் அடங்கி போக வேண்டும் என்றில்லை” என்று கூறுகிறார். பதிலுக்கு தனலட்சுமியும், “உங்களுக்கு எடுத்தெறிந்து பேச தெரியும் என்பது எனக்கு தெரியும்ண்ணா.. உங்களை யாரும் அடங்கிப்போக சொல்லவில்லை.. நீங்களும் பேசுங்கள்!” என்கிறார்.
பின்னர் அசீம், “உன்னை விட சூப்பரா எனக்கும் கோபம் வரும் ” என்கிறார். அதற்கு தனலட்சுமி, “உங்கள் கோபத்தை நான் பார்த்து இருக்கிறேன்.. என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்.. சனியன் எனக்குனே வாரம் வாரம் வருது” என்று மீண்டும் பேசுகிறார்.
இவர்களின் வாக்குவாதம் பதிலுக்கு பதில் பேச நீண்டுகொண்டே சென்றது. இதனால் சுற்றியிருந்த போட்டியாளர்கள் இருவரையும் அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் இருவருமே பேசிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் தனலட்சுமி வெளியே சென்று விட்டார். மற்றவர்கள் பெட்ரூமில் இருந்தனர். அப்போது மைனா, கதிரவன், மகேஸ்வரி என அனைவரும் அசீமை பெட்ரூமுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக மைனா, அசீமிடம், தனலட்சுமி குறித்து அவர் அதிகமாக பேசியது பற்றி கேள்வி எழுப்பி கொண்டு இருந்தார்.
மேலும் அதே வேளையில் பெட்ரூமுக்கு வெளியே மழை பெய்து கொணடிருந்தது. அங்கு குடை பிடித்தபடி தனலட்சுமி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். உள்ளே அசீம் உச்சகட்ட டென்ஷனில் அதே சமயம் சற்று நிதானமாக அனைவருக்கும் விளக்கம் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் அசீம், தனலட்சுமி இருக்கும் அணியில் தான் இருக்கப் போவதில்லை என்றும், தனலட்சுமி அசீம் இருக்கும் அணியில் தான் இருக்க முடியாது என்றும் கூறிவிட்டனர்.