தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் கலெக்ஷனை அள்ளிக்குவித்து பாக்ஸ் ஆபீஸை பற்றவைத்தது கடந்த கால வரலாறு. 60 வயதை கடந்தும் கூட 2.0, தர்பார் என அடுத்தடுத்த படங்களில் நடித்து, பிசியான ஹீரோவாக வலம் வரும் இவர் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இது ஒருபுறமிருக்க, ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல ஆண்டு காலமாக விவாதிக்கப்பட்டே வந்திருக்கிறது. 1996 தேர்தலில் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடு, அத்தேர்தல் முடிவுகளில் எதிரொலித்ததை எவராலும் மறுக்க இயலாது. அதற்கடுத்த காலங்களில் பல்வேறு மேடைகளிலும் தனது திரைப்பட காட்சிகளிலும் 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' என ரஜினியின் அரசியல் என்ட்ரி, தலைப்பு செய்திகள் ஆனாலும் அவரின் நேரடி அரசியல் வருகை கேள்விக்குறியாகவே இருந்து வந்தது...
அப்படி 20 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வந்த காத்திருப்புக்கு கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி விடை கிட்டியது. 'ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்-31 தேதி அறிவிப்பு. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை' என ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை, டாப் ட்ரெண்டிங் அடித்தது. மேலும் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த ரஜினி, 2021 தேர்தலில் என்ட்ரி கொடுப்பதாக தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் வருகை நிச்சயம் வருகின்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், ரஜினியின் பிறந்தநாள் அன்று அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்பும் வெளியானது. இதை தொடர்ந்து தனி விமானம் மூலம் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ஹைதராபாத்திற்கு பறந்தார் சூப்பர்ஸ்டார். இதையடுத்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற ஆரம்பிக்க, படக்குழுவில் இருந்து 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் ரஜினிக்கு நடத்தப்பட்ட கோவிட் பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என வந்திருப்பினும், உடலில் ஏற்பட்ட ரத்த அழுத்த ஏற்ற தாழ்வினால், அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 27-ஆம் தேதி அப்போலோவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிக்கு ஒருவார காலம் முற்றிலுமாக ஓய்வெடுக்க வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில்தான் தற்போது ரஜினி தனது அரசியல் வருகை குறித்த நீண்ட அறிக்கையை வெளியிட்டு, அரசியல் உலகின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, இப்போது அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு முடிந்த சேவையை செய்வேன் எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சாமனியர்கள் முதல் சமூக வலைதளம் வரை, ரஜினியின் இந்த திடீர் முடிவு பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. அவரின் இந்த முடிவுக்கு பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வரும் சூழலில், ரஜினியின் இந்த முடிவின் பின்னணியில் இருந்த காரணங்களை, சில அரசியல் பார்வையாளர்களுடன் உரையாடியதில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இங்கே தருகிறோம்.
அதில் முதலாவதாக இருப்பது, அப்போலோ மருத்துவர்கள் குழுவின் அறிவுறுத்தல்தானாம். ஹைதராபாத்தில் அவர் அனுமதிக்கப்பட்டதையடுத்து, எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு ரத்த அழுத்தத்தில் அதிகப்படியான ஏற்ற தாழ்வுகளும், கடுமையான மன அழுத்தமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ரஜினிக்கு முக்கியமாக இரண்டு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்தின் மாற்று சிருநீரகத்தின் பாதிப்பை கருத்தில் கொண்டு, அவரது ரத்த அழுத்தங்கள் சீராக இருக்க, ஒருவாரம் முற்றிலுமாக பெட் ரெஸ்ட் எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ரத்த அழுத்தங்கள் உடனக்குடன் கண்கானிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், குறைந்த அளவிலான உடல் அசைவுளில் மட்டுமே அவர் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும், குறிப்பாக மன அழுத்தத்தை அவர் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஹைதராபாத்தில் ரஜினியுடன் துணைக்கு சென்றிருந்த அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ், ரஜினியின் உடல்நிலை கண்டு ரொம்பவே கலக்கமடைந்து போனதாகவும், இதை தொடர்ந்து, 'இப்போது அரசியல், கட்சி கூட்டங்கள் என செல்வது நிச்சயம் பாதுகாப்பனது அல்ல. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், கொரோனாவில் இருந்து காத்து கொள்வது மிக அவசியம்' என ரஜினியின் நிலை கண்டு கவலைப்பட்டுள்ளார் அவர்.
இந்த சூழலில் அரசியல், தேர்தல் வேலை, சினிமா என தொடர்ந்து சிந்தித்து கொண்டிருப்பதால்தான் ரத்த அழுத்தங்களில் பிரச்சனை ஏற்படுகிறது என்றும், இந்த மன அழுத்தத்தில் இருந்து விலக இப்போதைக்கு அரசியல் வருகை வேண்டாம் எனவும் அவரது குடும்பத்தினர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு செல்ஃபோன், டிவி என அனைத்தையும் தவிர்க்கும்படியும் கூட அவருக்கு அன்பு கோரிக்கையாக குடும்பத்தினர் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனது உடல்நிலையில் ஏற்படும் பிரச்சனைகளை மிக ஆழமாக யோசித்த ரஜினி, இத்தோடு தனது குடும்பத்தினர் சொன்ன விஷயங்களையும் பரீசிலித்தே இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் இப்போதைக்கு சொன்ன சொல்லை காப்பாற்றுவேன் என்று அரசியலில் இறங்கி, தன்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்று ரஜினியே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அநேக ரசிகர்களும் கூட, அரசியல் என்று அவர் தன்னை மன அழுத்தத்திற்கு உண்டாக்காமல், பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதே நல்லது என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும், ரஜினி நேரடியாக இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும், அவரது வாய்ஸ் இதற்கு முந்தைய சில தேர்தல்களில் ஏற்படுத்திய தாக்கத்தை போல ஏற்படுத்தும் என ஆருடம் கூறுகின்றனர், ஒரு சிலர். ரஜினி நேரடியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவரின் அரசியலும் நிலைப்பாடும் எப்போதுமே லைம் லைட்டில் விவாதிக்கப்படும். அது இனி வரும் நாட்களில் என்னவாக இருக்க போகிறது என்பதற்கான பதில்... காலமே!!!