பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் ‘83’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார் பாலிவுட் நடிகையும், ரன்வீரின் மனைவியுமான தீபிகா படுகோன்.
கடந்த 1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் தலைமையின் கீழ் மேற்கத்திய தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியை இந்திய அணி வென்றது. இந்த சாதனையை மையமாக வைத்து உருவாகி வரும் ‘83’ திரைப்படத்தை இயக்குநர் கபீர் கான் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். அவரது மனைவி ரோமி பாட்டியாவாக ரன்வீரின் மனைவி தீபிகா படுகோன் நடிக்கிறார். இதையடுத்து, லண்டனில் நடைபெறும் ஷூட்டிங்கில் தீபிகா படுகோன் கலந்துக் கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், இப்படத்தில் சுனில் கவாஸ்கராக தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத்தாக சாகிப் சலீம், பல்விந்தர் சந்துவாக ஏம்மி விர்க், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக ஜீவா, சயது கிர்மணியாக சாஹில் கட்டர், சந்தீப் பட்டிலாக சிராக் பட்டீல், திலீப் வெங்சர்கராக ஆதிநாத் கோதரே, ரவி சாஸ்திரியாக தைர்ய கர்வா, மதன் லாலாக ஹர்தி சந்து, பி.ஆர்.மன் சிங்காக பங்கஜ் திரிபாதி ஆகியோர் இந்திய அணி வீரர்களாக நடிக்கின்றனர்.
இப்படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்.10ம் தேது ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.