பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி ‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

DD
திரையுலகில் விசில் படத்தில் நடித்ததன் மூலமாக கவனம் பெற்றவர் திவ்யதர்ஷினி எனும் DD. இதையடுத்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பிஸியாக இயங்கி வருகிறார். திவ்யதர்ஷினியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக ‘காபி வித் டிடி’ ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஒன்றாக அமைந்துள்ளது. நிகழ்ச்சிகளை கலகலப்பாக, சலிப்பில்லாமல் கொண்டு செல்வதில் திறமையானவர். இவர் தொகுத்து வழங்கிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பட விழாக்களும் ஹிட்டடித்துள்ளன.
சமீப நிகழ்ச்சிகள்…
ஆனால் சமீபகாலமாக அவர் அதிகளவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. இது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதையடுத்து சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் பங்குபெற்ற விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அதுபோலவே விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டையும் தொகுத்து வழங்கி இருந்தார்.
வாக்கிங் ஸ்டிக்கோடு….
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவை அவர் மற்றொரு தொகுப்பாளரான அர்ச்சனாவோடு இணைந்து தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்காக அவர் நிகழ்ச்சி மேடைக்கு நடந்து வருகையில் “வாக்கிங் ஸ்டிக்” உதவியுடன் நடந்து வந்தார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் கவனம் பெற்றது. முன்னதாக திவ்யதர்ஷினி தனக்கு காலில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தி லெஜண்ட் படத்தின் நிகழ்ச்சியை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் தன்னுடைய வழக்கமான எனர்ஜியால் தொகுத்து வழங்கினார்.