இந்திய திரையுலகில் 'டேவிட்', 'சோலோ' போன்ற மிகச்சிறந்த படங்களில் பல பரிசோதனைகள் முயற்சிகள் செய்து அவற்றை தரமான படைப்புகளாக தந்தவர் இயக்குநர் பெஜோய் நம்பியார்.
நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில், கருணை உணர்வை மையமாக வைத்து, "எதிரி" பகுதியினை இயக்கியுள்ளார் இயக்குநர் பெஜோய் நம்பியார். இக்கதையில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நவரசாவில் இயக்குனர் தயாரிப்பாளர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இயக்குநர் பெஜோய் நம்பியார் கூறியதாவது...
Makrand Deshpande ஒரு முறை என்னிடம் மிக முக்கியமாக ஒன்றைக் கூறினார். நீங்கள் விரும்பும், குருவாக மதிக்கும், ஆளுமையுடன் பணிபுரியும்போது கவனமாக இருங்கள். நீங்கள் அவரைப் பார்த்து வளர்ந்திருப்பதால், அவர்களுடன் பணிபுரிவது சில சமயங்களில் அவர்களின் மகத்துவத்தை, அவர்கள் மீதான உங்களின் கற்பனை பிம்பத்தை அழித்துவிடும். ஆதலால் அம்மாதிரி வாய்ப்புகளை, தவிர்ப்பது நல்லது என்றார். ஆனால் என் விசயத்தில் அது நடைபெறவில்லை. இளமையில் நான் பார்த்து பிரமித்த, மணி சார் உடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். அவருடன் பணிபுரிந்தபோது அவர் மீதான பிரமிப்பு அதிகரிக்கவே செய்தது. வாழ்நாளின் பொன் தருணங்கள் அவை என்றார்.
விஜய் சேதுபதியுடன் இப்படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்றது குறித்து, இயக்குநர் பெஜோய் நம்பியார் கூறியதாவது...
இப்படத்தில் பல காட்சிகளுக்காக, நானும் விஜய் சேதுபதியும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, உரையாடல்களை மீண்டும் எழுதினோம். நடிகர்கள் தங்கள் நடிப்பில் தங்களை எந்தளவு ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விஜய் சேதுபதி அவரது காட்சிகள் மட்டுமின்றி மொத்த படத்தையும் மேம்படுத்தினார். உதாரணமாக நடிகை ரேவதி அவர்களின் இறுதி வசனத்தை விஜய் சேதுபதி தான் எழுதினார். திரைக்கதையில் அவரது பங்களிப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது. டைட்டிலில் திரைக்கதையில் அவரது பெயரையும் இணைத்துள்ளேன். இப்படத்தை உருவாக்க, என்னுடன் உண்மையாக ஒத்துழைத்த, அர்ப்பணிப்புள்ள நடிகர்களை பெற்றது எனது அதிர்ஷ்டம் என்றார்.
தனது குரு மணிரத்னம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியுடன் "நவரசா" படத்தில் பணியாற்றியது, தனது வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வாக பிஜோய் மகிழ்கிறார். இப்படத்திற்காக விஜய் சேதுபதியுடன் இணைந்து, உரையாடல்களை மீண்டும் உருவாக்கியதை, மிகச்சிறந்த தருணமாக கூறியுள்ளார்.
"நவரசா" மனித உணர்வுளில் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு, ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாகும்.
தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, "நவரசா" உருவாகியுள்ளது. Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
"தமிழின் முன்னணி ஆளுமைகள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.