பிரபல நடன இயக்குனரான பிரேம் ரக்ஷித் நாட்டு நாட்டு பாடல் உருவான விதம் பற்றி நம்முடைய Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்திருக்கிறார்.
RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருந்த "RRR" திரைப்படம், வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் RRR படம் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், இதில் சிறந்த பாடலுக்கான விருதை "நாட்டு நாட்டு" பாடல் வென்றதையடுத்து இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, ஆஸ்கார் நாமினேஷனில் ஒரிஜினல் சாங் என்ற பிரிவில், RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகி உள்ளது.
இந்நிலையில், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிரேம் ரக்ஷித் பாடல் உருவான விதம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது,"பொதுவா ராஜமௌலி சார் ஃபெர்பெக்ட்டா இருக்கணும்னு எதிர்பார்ப்பாரு. ராம் சரண், ஜுனியர் NTR ரெண்டு பேருமே நல்லா டான்ஸ் ஆடுவாங்க. ஆனா, இந்த பாட்டுல ரெண்டு பேரும் ஒரேமாதிரி ஆடணும். அதுதான் சிரமான விஷயம். 120 மூவ்மென்ட்ல 3 மட்டும் தேர்ந்தெடுத்து பண்ணோம். ரெண்டு பேரும் ரொம்பவே கஷ்டப்பட்டு பிராக்டீஸ் பண்ணாங்க. பொதுவா 1, 2 டைம் ஒன்ஸ்மோர் கேக்கலாம். ஆனா, இந்த பாட்டுக்கு 18 ஒன்ஸ்மோர் கேட்டோம். ராஜமௌலி சார் கால் மூவ்மெண்ட் சரியா வரல ஒன்ஸ்மோர் கேளுங்கன்னு சொல்லிட்டாரு" என்றார்.
தொடர்ந்து நாட்டு நாட்டு பாடல் கோல்டன் க்ளோப் விருதை வென்ற தருணத்தில் தன்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை எனவும் வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷமான தருணம் அது எனவும் பிரேம் குறிப்பிட்டார்.