விஜய் டிவி, 06, பிப்ரவரி 2022:- டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் ஒருவார நிகழ்ச்சி மொத்தமும் தொகுத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.

‘மகா நடிகை’.. தாமரை
அதன் ஒரு டாஸ்கில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் கொடுக்கப்பட்டது. முன்னதாக தாமரை செல்விக்கு, ‘மகா நடிகை’ எனும் பட்டத்தை அபினய் கொடுத்தபோது, தாமரை அழத் தொடங்கினார். அப்போது தாமரையை சமாதானப் படுத்திய வனிதா, ‘சாவித்ரி அம்மாவே கொடுத்ததா நினைச்சுக்கோ’ என சொல்லி தாமரையை சமாதானப்படுத்தினார்.
விஷ பாட்டில் அனிதா...
இதேபோல் விஷ பாட்டில் எனும் ஒரு பட்டத்தை அனிதா சம்பத்துக்கு கொடுத்தார்கள். அதாவது, பலரும் சேர்ந்து ஓட்டு போட்டு கொடுக்கப்பட்ட இந்த பட்டத்தை குறிப்பிட்ட ஒருவரை அழைத்து கொடுக்க சொன்னார்கள். அனிதா சம்பத் இதனை தொகுத்து வழங்கும் வேலையை செய்தார். அப்படித்தான் அனிதா சம்பத் தன் பெயரே வந்துவிட்டதாக தாமரையின் காதில் சொல்லி தனக்கு கொடுக்க சொன்னார்.
ஆனால் அதற்கு முன்னதாக இந்த விருது பற்றி பேசிய தாமரை செல்வி, “இந்த விருது யாருக்கு வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். ஏனென்றால் எனக்கெல்லாம் விருது என்பது அமிர்தம் மாதிரி!” என்று கூறியிருந்தார். அதற்கு நன்றி சொன்ன அனிதா சம்பத், தானும் அதே கருத்தை சொல்லி, ஒரு நாலு பேர் தன்னை பார்த்து பயப்படுவது தனக்கு சந்தோஷம் தான் என கூறி இருந்தார்.
நாட்டாமை வனிதா விஜயகுமார்
இந்நிலையில் தான் வனிதாவுக்கு பிக்பாஸ் வீட்டின் நாட்டாமை விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த பட்டத்தை வழங்க, சுரேஷ் தாத்தா அழைக்கப்பட்டார். அப்போது பேசிய சுரேஷ் தாத்தா, “இந்த வீட்டின் நாட்ட்டாமை விருதை பெறுபவர், இந்த வீட்டின் நாட்-ஆமை. அந்த அளவுக்கு சுறுசுறுப்பானவர். வனிதா தான் அது” என அறிவித்தார்.
அதன் பின்னர் அங்கு வந்து அந்த பட்டத்தை ஏற்ற வனிதா, “இந்த விருதை நான் ஒருவருக்கு டெடிகேட் செய்கிறேன். அவர் தான் என் தந்தை விஜயகுமார். என்றைக்குமே நாட்டாமை அவர்தான். என்ன டாடி,, உங்க பேரை நான் காப்பாத்திட்டேனா? ” என்று கேட்டுக்கொண்டே கெத்தாக நடைபோட்டார்.