விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் வரவேற்ப்பை பெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசனுடன் நிறைவடைந்திருக்கிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் இப்போதிலிருந்தே காத்துக் கொண்டிருக்கின்றனர். குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கனி வெற்றி பெற்றார். பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான கனி, இயக்குனர் திரு அவர்களது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனி, ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார். அதில் பேசிய கனி, “தொடர்ந்து நான் பதிவிடும் வீடியோக்களிலும், சமையல் வீடியோக்களிலும் பலரும் கவனித்து, நீங்கள் தாலி போட மாட்டீர்களா என்று என்னை கேட்டீர்கள்.
தாலி அணிவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம், இடையில் வந்து புகுத்தப்பட்ட ஒரு விஷயம் என்று நான் நம்புகிறேன். தமிழ் மரபு என்னவென்றால் நம்ம மனசுக்கு பிடிச்சவங்கள, நாம மதிக்கிறவங்க முன்னிலையில், மாலை மாற்றி இவர் என் இணை, இவர் என் துணை என்று சொல்லி அவருடன் வாழ்க்கையை தொடங்குவதுதான். அதுதான் தமிழர்கள் மரபு என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் தாலி கட்டியே நான் திருமணம் செய்தேன். எனக்கும் அது பிடிக்கும். திருமணம் நடந்தது என்பதற்கான அடையாளமாக தாலி இருந்தது.
ஆனால் பிறகு தாலி மாற்றும் நிகழ்வு ஒன்று வைத்தார்கள். எனக்கு தடியாக இருக்கும் அந்த புது மஞ்சள் தாலி மிகவும் பிடித்திருந்தது. மூன்றாவது மாதம் தான் அந்த தாலியை மாற்றினார்கள். அதுவரை அந்த தாலியை நான் அணிந்திருந்தேன். அதை மாற்றி கட்டும் போது அதை மாற்றி கட்டியது என் புருஷன் கிடையாது.. சொந்தக்காரர்கள் தான் அதை கட்டினார்கள்.. தாலி கட்டுவது என்பது புருஷனுக்கான ஒரு விஷயம் தானே? என் கணவருக்கான ஒரு விஷயம் என்று மட்டுமே நான் நினைத்திருந்தேன்.
யாரோ ஒருவர் அந்த தாலியை கட்டினார்கள், யாரோ கட்டிய அந்த மூன்று முடிச்சு என்பதால் அதன் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. உங்களில் எத்தனை பேர் நீங்கள் உங்கள் கழுத்தில் கட்டப்பட்ட அந்த தாலியை பத்திரமாக வைத்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அந்த மஞ்சள் தாலியை, அதாவது என் புருஷன் எனக்கு கட்டிய அந்த மஞ்சள் தாலியை நான் என்னுடைய உயிர் மாதிரி பத்திரமாக வைத்திருக்கிறேன்.
ஆக ஒருவர் தாலி போட்டிருப்பதிலோ, போடாமல் இருப்பதிலோ இல்லை, அவர்களின் கல்யாண வாழ்க்கை மற்றும் அவர்களின் கேரக்டர். என்னுடைய கணவருடன் 8 வருட காதல் மற்றும் 12 வருட வாழ்க்கை என எல்லாவற்றையும் தாண்டி நான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தைகள் இருக்கின்றனர். இது எல்லாத்தையும் தாண்டி கல்யாணம் ஆகிவிட்டது என்பதற்கு எங்களுக்கு வேறு அடையாளங்கள் தேவையில்லை என்பதால், அதில் நான் பெருசாக அக்கறை காட்டுவதில்லை.
சும்மா ஏதோ ஒரு தாலி செயின் போட்டுக்கொண்டும், வீடியோவில் தாலியை அணிந்து கொண்டும் மற்றவர்கள் முன்னால் நின்று பேசி விட்டு பத்து நிமிடத்தில் பின்னர் அதை கழட்டி போட்டு விட்டு போக முடியும். இப்படி பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் என்னுடைய நிலைப்பாடு இதுதான். அப்படி நடிப்பதும் ஏமாற்றுவதும் எனக்கு பிடிக்காது. இதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். புரிந்து கொள்ளுங்கள். தவறாக எண்ண வேண்டாம்.” என பேசியுள்ளார்.
மேலும், “நான் மிகவும் திறந்த மனதுடன் இருப்பேன், லொட லொடாவென பேசிக்கொண்டே இருப்பேன். என்னுடைய கணவர் அதற்கு நேர் எதிரானவர். அதிகம் பேச மாட்டார். அவர் பொறுப்பாக இருப்பார். எனக்கு அந்த பையனை மிகவும் பிடிக்கும்!” என்று பேசியிருக்கிறார். இதே போல் தன் கையில் உயிர் தமிழுக்கு என்று வட்டு எழுத்துக்களில் எழுதி பச்சை குத்தி இருப்பதை பற்றியும் கனி குறிப்பிட்டுள்ளார்.