டெலிவிஷன் சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளில் தோன்றி புகழ்பெற்ற பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியில் கலக்கி வந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அண்மையில், கடந்த நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற்ற உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் இந்த விருது உலகத்தமிழ் அமைப்பால் (WTO-UK), இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இந்தியாவில் பிரபலமான சமையல் கலைஞராகவும், சமையற்கல்லூரி ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றிய தாமு, இதுவரை 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார். தற்போது தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவராகவும் உலக சமையல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ள செஃப் தாமும், இல்லத்தரசிகளுக்கு 26 புத்தகங்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கான சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா-ராணி-சீரியலின் இரண்டாம் பாகத்தில், செஃப் தாமு சிறப்பு எண்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆம் இந்த நிகழ்ச்சியில் ஹீரோவாக வரும் சரவணன் ஒரு சமையல் நிகழ்ச்சிக்காக தென்காசியிலிருந்து, தன் மனைவி சந்தியாவுடன் சென்னை சென்றார்.
அங்கு நடக்கும் சமையல் நிகழ்ச்சிக்கு செஃப் தாமு தான் சிறப்பு விருந்தினராக வருகை தந்ததுடன், நடுவர் குழுவில் பங்கேற்று, சமையலை சாப்பிட்டு பார்த்து கருத்து சொல்பவராக நடித்திருந்தார்.
நிஜ வாழ்க்கையில் தொழில்முறை சமையல் நிபுணரான செஃப் தாமு, இந்த சீரியலில் கௌரவ தோற்றமாக ஒருநாள் எபிசோடில் எண்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார்.