அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதை திரையில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”, 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது பார்த்திபன் தன் சமூக வலைதளத்தில், பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அதில், “Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100!” என்று பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.