யூடியூபர் மதன் பேச்சுகள் கேட்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகவும் முதலில் அதனை முழுமையாக கேட்டுவிட்டு முன் ஜாமின் வழக்கில் வாதிடுமாறும் மதன் தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம், அறிவுறுத்தியுள்ளது.
யூடியூபில் மதன் என்பவர், 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுணுக்கங்களை டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் சேனல் மூலம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்த இவரது செயலை அடுத்து அந்த சேனலுக்கு சப்ஸ்கிரைபர்கள் அதிகமாகினர். இதனை அடுத்து மதனின் இந்த செயல்பாடுகள் குறித்து சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்களுன் அளிக்கப்பட்டன.
இதனிடையே மதன் மீது பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதன் மனுத்தாக்கல் செய்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன் மீது பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார் அவரது வழக்கறிஞர். இதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதனின் ஆபாச பேச்சுகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சிறார்களை தவறாக வழிநடத்தும் வகையிலும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி தண்டபாணி, மனுதாரர் மதனின் வழக்கறிஞரிடம், யூடியூப் பதிவில் மதன் பேசியதை கேட்டீர்களா? என கேள்வி எழுப்பி, அவை காதில் கேட்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றன, அந்த பதிவுகளை முழுமையாக கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.