பிக்பாஸ் வீட்டுக்குள் நடியா தன்னுடைய கதையை சொல்லத் தொடங்கினார். அதில், “என் பெயர் நடியா சாங். என் கணவர் சைனீஸ். அவரை கல்யாணம் பண்ணி, அதற்கு பிறகு வந்த பெயர் தான் சாங். இது ராசியான பெயர் என்று சொல்லலாம். அப்பா வைத்த பெயர் அருஜெயலட்சுமி. அப்பாவின் பெயர் அருஜூனன். அம்மாவின் பெயர் ஜெயந்தி. இவர்கள் பெயரிலிருந்து என் பெயர் வைத்தார்கள். அக்கா, நான் மற்றும் என் தங்கை என மூன்று பேர் எங்கள் வீட்டில். எந்த வசதியும் வீட்டில் இல்லை.
எந்த வசதியையும் பார்க்காமல் வளர்ந்தோம். என் கணவரை பார்க்கும் வரை அப்படித்தான், ஒரு கட்டில் மெத்தையில் படுத்ததில்லை. ஒரு முழு வீட்டில் இருந்ததில்லை. ஒரு ரூம் மட்டும் தான் எங்களுடைய வீடாக இருந்தது. அப்பா தண்ணி அடிப்பார். சொந்தக்காரர்கள் எங்களை மதிக்க மாட்டார்கள். என் அம்மா என்னை அடித்தது போல், ஒரு அம்மா குழந்தையை அடித்தால், அது இப்போது குழந்தை வதை என்கிற குற்றத்தின் கீழ் வரும். அம்மா மிகவும் கண்டிப்பானவர் (அழுகிறார்).
நான், அக்கா, தங்கை மூவரும் என் அம்மாவின் அடி தாங்க முடியாமல் 14 வயதில் இருந்து எத்தனையோ முறை பள்ளி படிக்கும் போது வீட்டை விட்டு ஓடி இருக்கிறோம். ஒருமுறை போலீஸ்காரரிடம் அடி வாங்க வைத்தார் அம்மா. அந்த நிமிடம் எனக்கு மிகவும் வெறுப்பு வந்தது. என் அம்மா அப்பாவை மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் மூன்று சகோதரிகளை அடுத்து, நான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு கொடுத்த பாசமோ சுதந்திரமோ அவர்கள் எங்களுக்கு கொடுக்கவில்லை.
ஒருவேளை என் அம்மா இப்போது இருப்பதுபோல் எங்களை வளர்க்கும்போது இருந்திருந்தால், நான் இப்போது வரை திருமணமே செய்திருக்க மாட்டேன். நன்றாக படித்து, வேற மாதிரி இருந்திருப்பேன். படிப்பதற்கு எனக்கு வசதி இல்லை. 14 வயதிலிருந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். ஹவுஸ் கீப்பிங் வேலையை ஹோட்டலில் செய்தேன். என் கணவர் அங்கு அடிக்கடி வந்து போவார். என்னை அம்மாவிடம் அடி வாங்கும் போது பார்த்து இருக்கிறார்.
ஒருமுறை நேரில் வந்து மலாயில் பேசினார். என்னை பிடித்து இருப்பதாக கூறினார். நான் என் அம்மாவிடம் பேச சொன்னேன். பேசினார். அதன் பிறகு வீட்டில் தீபாவளி. அம்மா அடிக்கத் தொடங்கினார். பின்னர் என் அம்மாவை முதன்முதலில் எதிர்த்து பேசி என்னை திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியே கூட்டிச் சென்றார் என் கணவர்.
சுதந்திரம் எனக்கு கிடைத்தது. நான் என்னுடைய தன்னம்பிக்கை நம்பி மட்டுமே அவருடன் சென்றேன். தனக்குப் படிப்பு வரவில்லை, முட்டாள் என்று சொல்லி தன்னை விட்டு விட்டு சென்று விட வேண்டாம் என்று என்னிடம் அவர் கேட்டு இருந்தார். அப்போது அவரிடம் நான் சொன்னேன். நீ என்னை வீட்டைவிட்டு கூட்டி வரும் போது, இந்த உலகத்தையே எதிர்த்து நீ நிப்ப என்கிற நம்பிக்கையில்தான் உன்னுடன் வந்தேன். உனக்கு எது வந்தாலும் வரவில்லை என்றாலும் கடைசி வரை நான் நிற்பேன் என்று கூறினேன்.
என் அம்மா சொன்னார். உருப்படாம போவேன் என்று சொன்னார். இந்த உலகத்திலேயே உருப்படமாட்டீங்க.. நாசமா போய்விடுவீங்க.. என்று ஒரு தாய் சொல்வார் என்றால், என்னுடைய அம்மா அதை நிறைய முறை செய்திருக்கிறார்.
எனக்கு என்று ஒரு கனவு இருந்தது. அம்மாவுடன் இருந்தபோது அந்த கனவு நடக்காது என்று தெரியும். அதற்காக தான் திருமணம் செய்தேன். அதன் பிறகு ஒரு வெள்ளைக்கார ஆபீஸில் ஒரு நண்பர் வேலை தேடிக் கொடுத்தார். அந்த வேலை கிடைக்கும் போது எனக்கு முதல் குழந்தை பிறந்து விட்டது. வாழ்க்கையில் முதல் முறை ஒரு வெள்ளைக்கார ஆபீஸில் வேலைக்கு சேர்ந்து கைநிறைய சம்பாதித்தேன். அதன்பிறகு நான் வச்சதுதான் சட்டம் நான் வச்சதுதான் ஆட்சி என்று என் கனவை தொடங்கினேன்.
என் வாழ்க்கை முழுவதும் வேலை வேலை என்று இருந்து விட்டேன். என் வாழ்க்கையில் இரண்டாவது பெண் பிறந்தபோதுதான் வாழ்க்கையை வாழத் தொடங்கினேன். 2015 - மிஸஸ் மலேசியன் இந்தியன் டாப் மாடலிங் லிஸ்டில் முதல் ரன்னர் அப்-ஆக வந்தேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் அம்மாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று செய்தேன். எந்தப் பிள்ளையை வெறுத்தார்களோ அதே பிள்ளையால் அவருக்கு பெருமை சேர வேண்டும் என்று சேர்த்தேன்.
சின்ன வயதில் இருந்தே அம்மாவின் பாசம், அப்பாவின் அரவணைப்பு எனக்கு கிடைக்கவில்லை என்பதால் இப்படி ஒரு கணவர் மற்றும் குழந்தைகள் கிடைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர் இல்லையென்றால் நான் கண்டிப்பாக இருக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியும். நான் இப்படி நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் கணவர்தான்.
நான் வாழ்க்கையில் விமானத்தில் கூட ஏறியதில்லை. இவ்வளவு தூரம் இங்கு வந்து இங்கு நிற்பதற்கு என் மீது இருக்கும் நம்பிக்கை மட்டும் தான் காரணம். என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களும் என்னை செதுக்கின. அதற்கு மெயின் காரணம் என் அம்மாதான். அவருக்கும் என் கணவருக்கும் நன்றி சொல்கிறேன்!” என்று குறிப்பிட்டார்.